வவுனியா நகரசபை ஊழியர்களின் போராட்டத்தால் களேபரமானது சபை அமர்வு

தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா நகரபை ஊழியர்கள் சிலர் முன்னெடுத்துவரும் போராட்டத்தால் இன்று (18) இடம்பெற்ற சபை அமர்வு களேபரமானது.

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த இறம்பைக்குளம் வட்டார உறுப்பினர் சலிஸ்டன், போராட்டம் மேற்கொள்ளும் ஊழியர்களை வேலையால் நிறுத்தியமை அநியாயமான செயற்பாடு. நகரசபை வாயிலில் போராட்டம் மேற்கொள்வதால் சபைக்கே இழுக்கு சுழற்சிமுறையில் பதவிகள் மாற்றம் செய்வதென்றால் பாரபட்சமற்ற முறையில் அந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே குறித்த ஊழியர்களின் போராட்டத்திற்கு ஒரு தீர்வை வழங்குமாறு கோரியிருந்தார்.

இதன்போது பேசிய சிரேஸ்ட உறுப்பினர் மோகன், அவர்களது பிரச்சனையை தீர்த்து தரலாம் என்று கூறிய நிலையில் எம்மை கணக்கெடுக்காமல் அவமானப்படுத்திவிட்டு, அரசியல் கட்சிகளுடன் இணைந்து இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தேவையில்லாமல் சபை நிர்வாகத்துடன் முரண்பட்டு அவர்களது பிரச்சனையை தீர்க்க முடியாத நிலமைக்கு கொண்டு வந்துள்ளனர். எத்தனையோ வாய்ப்புக்களை நாம் வழங்கியும் அவர்களது ஒத்துழைப்பு இல்லாமையாலேயே இவ்வளவு தூரத்திற்கு இந்த பிரச்சனை வளர்ந்தது என்றார்.

அவர்களது அணுகுமுறைகள் பிழையாக இருந்தமையாலேயே இந்த பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது. நிர்வாகத்துடனோ அல்லது சிரேஸ்ட உறுப்பினர்களிடமோ வந்து பேசாமல் இப்படி சபைக்கு இழுக்கை ஏற்படுத்தவே இப்படியான போராட்டங்களை செய்வதாக பல உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதன்போது பேசிய தவிசாளர் கௌதமன். இவர்களது கோரிக்கைகள் ஒவ்வொருநாளும் மாற்றப்படுகின்றது. சபைக்கு எதிராகவும் உறுப்பினர்களிற்கெதிராகவும்,முறையற்ற துண்டுப்பிரசுரங்களை வினியோகித்து அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்துகின்றனர்.இது நீதியற்ற ஒரு போராட்டம் என்றார். இதனால் உறுப்பினர் சலிஸ்டனும் தவிசாளரும் கடுமையாக முரன்பட்டுக்கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சபை செயலாளர் இ.தயாபரன், சட்டத்திற்குட்பட்டே நாம் அவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளோம். கோல்டன் என்ற ஊழியருக்கு வழங்கப்பட்ட நியமனத்தின் அடிப்படையில் பணிமாற்றம் வழங்கினோம். அவர்சுகவீன விடுமுறையை வழங்கி இரண்டு மாதங்களிற்கு மேல் வேலைக்கு சமூகமளிக்கவில்லை. அதற்கான மருத்துவ சான்றிதழும் தரவில்லை. எம்மோடு வந்து கதைக்கவும் இல்லை.

இந்த நிலையில் முறையான சட்டத்தின் அடிப்படையிலேயே அவர்களை பணிநீக்கம் செய்துள்ளோம். இது தொடர்பாக எனது உயர் அதிகாரிகளிற்கும் தெரியப்படுத்தியுள்ளேன். சட்டத்திற்கு புறம்பாக இங்கு எதுவுமே இடம்பெற்வில்லை.நாம் வழங்கிய பல சந்தர்ப்பங்களை அவர்களாகவே தட்டிக்கழித்ததனர். தற்போது அவர்களிற்கான விசாரணை இடம்பெறும்.

அவர்கள் மீது 7 குற்றசாட்டுக்கள் எங்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை தாம் செய்யவில்லை என்று நிருபித்தால் மீண்டும் வேலை வழங்க முடியும். இதேவேளை ஏற்கனவே பணி நிறுத்தப்பட்டிருந்த நான்கு ஊழியர்களை மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் பணிக்கும் எடுத்திருந்தோம். என்றார்.

குறித்த விடயம் தொடர்பாக சபையில் நீண்ட விவாதம் இடம்பெற்று வந்தது. உறுப்பினர் சலிஸ்டன் சிரேஷ்ட உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகனுடன் அவர்களது பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடி குறித்த பிரச்சனைக்கான தீர்வை பெறும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று தீர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்