அரசமைப்பு உருவாக்க நிபுணர்குழு கூட்டமைப்பினருடன் இன்று பேச்சு!

புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்குக் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்களைச் சந்திக்கின்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., பங்களாளிக் கட்சித் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), த.சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) ஆகியோர் பங்குபற்றுவர் எனத் தெரிகின்றது.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றை புதிய அரசு நியமித்திருப்பது தெரிந்ததே.

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பேராசிரியர் நஸீமா கமர்டீன், சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.சர்வேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி சமன் ரத்வத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்த்தனா, பேராசிரியர் வசந்த ஜெனிவிரத்தை ஏனைய எண்மருமாவார்.

இந்தக் குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான யோசனைத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்தது. இந்தக் குழுவையே கூட்டமைப்புத் தலைவர்கள் இன்று சந்தித்து தமது கருத்து நிலைப்பாட்டைத் தெரிவிக்க இருக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.