புதிய தவிசாளர்களின்தெரிவும், முஸ்லிம் உறுப்பினர்களின் சமூகம்சார்ந்த தீர்மானமும்!- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொங்கு சபைகளாகக் காணப்பட்ட சில சபைகளில் புதிய தவிசாளர்களைத் தெரிவு செய்யும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . அந்த வகையில் வாகரை, செங்கலடி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரிவுகள் நடைபெற்று முடிந்து விட்டன. ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு 01.03.2021 இல் நடைபெறவுள்ளது . அந்தச் சபையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் 17இல் 05 உறுப்பினர்கள் முஸ்லிம் சகோதர்களாகும் . இந்த உறுப்பினர்கள் ஐவரும் ஒற்றுமையாகத் தமது சமூகம் சார்ந்து தீர்மானம் எடுக்க உள்ளதாகக் கூறி வருகின்றார்கள். இது நல்ல விடயமாகும். ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் முஸ்லிம் சகோதர்களின் சமூகப் பிரச்சனையில் எரிதழலாக இப்போது இருப்பது கொரோனா வைரஸின் தாக்கத்தால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கின்ற விடயமாகும்.
இதனை 100% முஸ்லிம் சகோதர்கள் எதிர்கின்றார்கள். அதே போல் TNA கட்சியும் இதனை எதிர்க்கிறது . பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை என்ற மக்கள் எழுச்சிப் பேரணியில் 10 அம்சக் கோரிக்கைகளில்
“எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே” என்ற கோசமும் முக்கியமானதாகும். இவ்விடயத்திற்கு முஸ்லிம் சகோதர்கள் பெருமளவில் திரண்டு ஆதரவளித்தார்கள். இணைந்தும் பயணித்தார்கள்.
இவ்விடயம் தமிழ் பேசும் மக்களை இணைப்பதாகவும், ஒற்றுமைப்படுத்துவதாகவும் அமைந்தது. அதேவேளை தற்போதைய நிலையில் ஆரையம்பதி பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்களின் தெரிவு இரண்டுதான் உள்ளது .
- ஜனாசாவை எரிப்பதற்கு எதிரான TNA சார்பாக வாக்களிப்பது.
- ஜனாசாவை எரிப்பதற்கு ஆதரவாகவுள்ள அரசாங்கம் சார்ந்த TMVP ற்கு வாக்களிப்பது.
நிச்சயமாக தமது சமூகம் சார்ந்து சிந்திக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜனாசா எரிப்புக்கு எதிரான TNA இற்குச் சார்பாக வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றோம் .
ஆனால் வாகரைப் பிரதேச சபையில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜனாசா எரிப்புக்கு ஆதரவான அரசாங்கம் சார்ந்தவர்களுக்கு வாக்களித்தமை வேதனைக்குரிய விடயமாகும் . இதனை ஆரையம்பதிப் பிரதேச சபையில் செய்ய மாட்டார்கள். என்று நம்புகின்றோம் . முஸ்லிம் தலைவர்களும் அதற்குரிய சரியான நெறிப்படுத்தலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
கருத்துக்களேதுமில்லை