யாழ்ப்பாண சிறைச்சாலையிலுள்ள விளக்கமறியல் கைதியொருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலுள்ள விளக்கமறியல் கைதி ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் இருந்த ஏனைய 7 பேரையும் அதேகூடத்தில் சுயதனிமைப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் பணித்துள்ளது.

அத்துடன் மானிப்பாய்- சங்குவேலியைச் சேர்ந்த கைதி, கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட முன்னர் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்கின்றனர்.

போதைப்பொருள் பாவனையால் மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த சந்தேகநபருக்கு ஞாபக சக்திக் குறைபாடு உள்ளமையால் தொடர்புகளைக் கண்டறிவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

சந்தேகநபர் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில், மல்லாகம் நீதவான் நீதிமன்ற வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி, மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் கடந்த 12ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டடுள்ளார். அவருடன் மேலும் 7 கைதிகள் ஒரே சிறைக்கூடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 8 பேருக்கும் இன்று பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்பட்டதில் குறித்த சந்தேகநபருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

மேலும் சந்தேகநபருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் மணநீக்க வழக்கு இருப்பதனால் அங்கு சென்றமை தொடர்பில் ஆராயப்படுகிறது.

அத்துடன் சந்தேகநபர் மேசன் தொழிலாளிகளுடன் உதவிக்கு செல்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் சிறைச்சாலை நிர்வாகத்துக்கும் சுகாதாரத்துறைக்கும் பெரும் சிக்கல் நிலையை உருவாக்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்