சாரணிய தினம், மட்டக்களப்பில் தாய்ப்பூமியை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வு

சாரணிய இயக்கத்தின் தலைவர் பேடன்பவளின் பிறந்த்தினத்தையொட்டி மட்டக்களப்பில் தாய்ப்பூமியை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்டரீதியான நிகழ்வு அதன் மாவட்ட ஆணையாளர் வீ. பிரதீபன் தலைமையில் மட்டக்களப்பு நீரூற்றுப் பூங்காவில் பேடன்பவள் நினைவுச் சிலைக்கருகாமையில் இன்று (22) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்க அதிபரும் சாரணிய சங்க மாவட்ட தலைவருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் கலந்து கொண்டு பேடன்பவள் சிலைக்கு களுத்துன்கோட்டு அணிவித்து வைத்தார். இதன்போது மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரும் சாரண சங்க்தின் மாவட்ட உபதலைவருமான திருமதி. சுஜாதா குலேந்திரகுமார், இராணுவ 23வது படையணி அதிகாரி பிரிகேடியர் பிரதீப் கமகே, மாவட்ட உதவி சாரண ஆணையாளர் வே.ஆ. புட்கரன், இணைப்பாளர் ஜெயசீலன். பெண் சாரணிய அமைப்பின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி. வீ. ரவிச்சந்தின் உள்ளிட்ட சாரணிய அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன்போது அரசாங்க அதிபர் கே. கருணாகரன் உரையாற்றுகையில் பேடன்பவள் என்ற உத்தமரால் உருவாக்கப்பட்ட சாரனியக் கொள்கை உடம்பில் ஓடிக்கொண்டிருந்தால் அவர் எந்த தேசத்தில், எந்த இனமாக, எந்த மதமாக இருந்தாலும் மனிதராக உத்தமராக இந்த உலகத்தில் வாழமுடியும் என்பதற்கு சாரணிய இயக்கம் சிறந்த உதாரணமாகும் எனத் தெரிவித்தார்.
இதுதவிர இவ்விசேட நிகழ்வில் தாய்ப்பூமியை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைய மரநடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் மரம் நடும் செயற்பாடு எதிர்வரும் 27 ஆந் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்