பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோவிற்பனை செய்யப்படமாட்டாது – ராமேஷ்வரன் எம்.பி

(க.கிஷாந்தன்)

பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது என்று இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 தனி வீடுகளை கட்டி அமைக்க (22) இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் கடந்த காலங்களில் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது திட்டங்கள் உரியவகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு வீட்டுக்கு தலா 13 லட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட மக்களுக்கும், முகாமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைக்கும், சம்பள பிரச்சினைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.  சம்பள நிர்ணயச் சபையின் அடுத்தக்கூட்டத்தின்போது ஆயிரம் ரூபா தொடர்பான சாதகமான முடிவு எட்டப்படும் என நம்புகின்றோம்.

ஏதோவொரு உள்நோக்கத்தின் அடிப்படையில்தான் கம்பனிகளின் பிரதிநிதிகள் கடந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அடுத்தமுறை அவ்வாறு நடைபெறாது.

நாம் இந்திய தூதுவரை வழமையாக சந்தித்து கலந்துரையாடுவோம். இந்தியாவால் மலையகத்துக்கு 14 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டன. அந்நாட்டின் உதவியுடன் உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. பாடசாலைகள் மேம்படுத்தப்பட்டன.  தற்போது கொரோனா தடுப்பூசிகூட வழங்கப்பட்டுள்ளது. இவற்றை இந்தியா செய்யும்போது நல்லம், அது பற்றி எவரும் கதைப்பதில்லை. ஆனால் தோட்டங்களை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதில் மாத்திரம் குறை காண்கின்றனர்.

பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கும் எண்ணம் இல்லை. சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் கூறுகின்றனர். அவ்வாறும் நடைபெறாது. தற்போதைய கம்பனிகளுக்கு தோட்டங்களை நிர்வகிக்கமுடியாதென்றால், அவற்றை எமது மக்களுக்கே பகிர்ந்தளித்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பதே காங்கிஸின் நிலைப்பாடாகும்.

இலங்கையின் உள்விவகாரங்களை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்வது சரியில்லை. பிரச்சினைகளை இங்கு பேசி தீர்க்க வேண்டும். ஜெனிவா மாநாடு என்பதெல்லாம் வீண் பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்