சம்மாந்துறை டிப்போ விவகாரம் : இலங்கை போக்குவரத்து சபை தலைவரை சந்தித்த மு.கா எம்பிக்கள் குழு

(அபு ஹின்ஸா)

சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச்செய்ய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை சந்தித்தது கலந்துரையாடியதாகவும் அந்த சந்திப்பில் திருப்திகரமான முடிவு கிடைத்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை சந்திக்கும் நிகழ்வில் என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோரும் கலந்து கொண்டு சம்மாந்துறை பிரதேசத்தில் அந்த டிப்போவின் தேவைகள் பற்றியும், மிகப்பெரிய பிரதேசமான சம்மாந்துறைக்கு அந்த டிப்போ இருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இந்த டிப்போவை மூடி அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் தனது நிலைப்பாட்டை கைவிடுவதாக உறுதியளித்தார்.

மேலும் டிப்போவை மூடி அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் நிலைப்பாட்டை ரத்து செய்துள்ள விடயத்தை அமுல்படுத்தி அந்த டிப்போவை மேலும் அபிவிருத்தி செய்ய  உரிய நடவடிக்கைகளை எடுக்க இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி இந்த டிப்போவின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தலைமையிலான குழுவொன்று கள விஜயம் செய்ய உள்ளது என்றார்.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸை சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்