கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றோருடன் புதுக் கூட்டு வேண்டாம்! – மாவைக்கு சம்பந்தன் அறிவுறுத்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனிக் கட்சிகளை அமைத்தவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ கட்சி, கட்டமைப்பு ரீதியான முடிவு எடுக்கப்படாத நிலையில் தன்னிச்சையாகப் புதுக்கூட்டு எதையும் உருவாக்கும் தீர்மானத்தை எடுக்கவோ, அறிவிக்கவோ வேண்டாம்.”

– இவ்வாறு மிகத் திட்டவட்டமான, தெளிவான அறிவுறுத்தலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவுக்குத் தொலைபேசி மூலம் வழங்கியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி.

‘தமிழ்த் தேசியப் பேரவை’ அமைவது குறித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் கூட்டாகத் தாம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தமை குறித்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்புத் தமிழ் தொலைக்காட்சிச் சேவை ஒன்றில் வெளியான செய்தித் தொகுப்பை கேட்டறிந்த பின்னரே மாவை சேனாதிராஜாவுடன் நேற்று திங்கட்கிழமை காலை சம்பந்தன் தொடர்புகொண்டார் என அறியவந்தது.

தாம், அந்தக் கூட்டத்தில் இருக்கவில்லை என்றும், தமக்குத் தெரியாமல் இடம்பெற்ற சம்பவம் அது என்றும் சாரப்பட மாவை சேனாதிராஜா பதிலளித்தார்.

“செய்தியாளர் மாநாட்டில் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சிவஞானமும் இருந்திருக்கின்றார். நானே நேரடியாக விடயங்களைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். கூட்டமைப்பிலிருந்து விலகி, கூட்டமைப்பை நலிவுபடுத்தியோரே மற்றெல்லோரும். அவர்கள் எல்லோருமே விரும்பினால் கூட்டமைப்புக்குள் வரலாம். நாங்கள் அவர்கள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. தாங்களாகவே வெளியேறினார்கள். அவர்கள் விரும்பினால் எல்லோரும் கூட்டமைப்புக்குள் வரலாம்.

அப்படி இருக்கையில் ஏன் தனியாக அவர்களுடன் இன்னொரு கூட்டு? கூட்டமைப்பை நலிவுபடுத்தவா? அதுவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவு எட்டாமல் எப்படி கூட்டமைப்பையும் சேர்த்து புதிய கூட்டுச் செயற்பாடு குறித்து ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க முடியும்? அதுபோலவேதான் தமிழரசுக் கட்சிக்கும்.

கட்சி உரிய முறையில் அமைப்பு ரீதியாகக் கூடி ஒரு முடிவு எடுக்காமல், கட்சியிலிருந்து வெளியேறியோருடன் ஒரு தலைப்பட்சமாக நீங்கள் எப்படி கூட்டுச் செயற்பாடு, கூட்டு என்று நடவடிக்கைகளை எடுக்க முடியும்? உடனடியாகச் சம்பந்தப்பட்டோருக்கு அறிவித்து, உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, இந்த நடவடிக்கைகளை நிறுத்தச் சொல்லுங்கள்.

நாங்கள் கலந்து பேசி பின்னர் தீர்மானங்களை எடுக்கலாம். அவசரப்பட்டு தம்மிஷ்டப்படி யாரும் முடிவுகளை எடுத்து அறிவிக்க அனுமதியாதீர்கள்” என்று சாரப்பட இரா.சம்பந்தன் அறிவுறுத்தலை வழங்கினார்.

சம்பந்தரின் கருத்தை மாவை சேனாதிராஜா எதிர்த்துப் பேசாமல் செவிமடுத்து, இணக்கம் தெரிவித்தார் என்றும் அறியவந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்