“பேரினவாத பூமராங்” வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது – மனோ கணேசன்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்தி, முஸ்லிம் எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டிவிட்டுதான், நல்லாட்சியை தோற்கடித்து, இன்றைய அரசாங்க கட்சி பதவிக்கு வந்தது. ஆகவே சஹரான் குண்டு வெடிப்பு, இந்த ஆட்சிக்கு மறைமுகமாக பாரிய உதவியாக அமைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

 

மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

இன்று, குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் பட்டியலை, ஆணைக்குழு அறிக்கை தந்துள்ளது. அதில் முதலிடம் மைத்திரிபால சிறிசேன என்ற முன்னாள் ஜனாதிபதி மட்டுமல்ல, இந்நாள் ஆளுங்கூட்டணி தவிசாளர் மற்றும் மொட்டு கட்சியின் பொலன்னறுவை மாவட்ட எம்பியும், சபையில் ஆளும் தரப்பின் முதல் வரிசையில் அமர்ந்துள்ள முதல் எம்பியும் ஆகும்.

குண்டு வெடிப்பு நடைபெற சில மாதங்களுக்கு  முன்னர் மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியை தடாலடியாக கலைத்து, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, ஒரு “அரசாங்கத்தை”  2018ம் வருடம் நியமிக்க முயன்றார் என்பதையும் மறக்க முடியாது.

ஆகவே, குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் யார் என்பதை அடையாளம் காண்பதை விட, அதன் பின்னணியில் யார் இருந்தார்கள், அதன் மூலம் யார் பயன் பெற்றார்கள் என்ற கோணங்களிலும் ஆராய வேண்டும்.

“பேரினவாத பூமராங்” வளையம், அதை எறிந்த பேரினவாத மொட்டுகாரர்களை நோக்கி இப்போது திரும்பி வருகிறது. உயிர்த்த ஞாயிறு உதிர்த்த அப்பாவி உயிர்கள், எனது கொழும்பு மாவட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும், மட்டக்களப்பபு மாவட்ட சீயோன் தேவாலயத்திலும்,  கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்திலும் ஆராதனையில் ஈடுபட்டிருந்த தமிழ், சிங்கள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் ஆவர். இதனுடன் நட்சத்திர விடுதிகளிலும் வெளிநாட்டு உள்நாட்டு மக்கள் கொல்லப்பட்டர்கள்.

இப்படி உயிரிழந்த அப்பாவி மனிதர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டி, “வினை விதைத்தோர், வினை அறுக்கும்” படலம் இப்போது ஆரம்பமாகிறது என நான் கருதுகிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.