20இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது-இம்ரான் மஹ்ரூப்

20இற்கு ஆதரவாக வாக்களித்தோர் ஜனாசாக்களை அடக்கம் செய்ய கிடைத்த அனுமதியை உரிமை கோர முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி அறிவித்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இம்ரான் மஹ்ரூப் மேலும் கூறியுள்ளதாவது, “கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்ட விடயத்தில் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை மீறலுக்கான தீர்வானது, பல போராட்டங்களின் பின் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் 350 ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட பின்னர்தான் கிடைத்துள்ளது.

எனவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்தவர்கள் உள்ளிட்ட எவரும் இதற்கு தனிப்பட்ட ரீதியில் அனுமதி கோர முடியாது.

காரணம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதாரவாக வாக்களித்த அடுத்த தினமே இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

அவர்களுக்கான தனிப்பட்ட தேவைகள் நிறைவேற்றப்பட்டதே தவிர, ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை. தற்போதைய அரசாங்கமானது இனவாதத்தை கையிலெடுத்து ஆட்சியை கைப்பற்றியது.

ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் அவர்களுக்கு இனவாதமே தேவைப்பட்டது.

வியாழக்கிழமை வரை இதற்காக இவர்களுக்கு ஜனாஸா தகனம் தேவைப்பட்டது. தற்போது அந்த தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதால் தற்போது முகம் மூடுதல் தடை , மதரஸாக்கள் தடை என கூறி இதன் அடுத்த பாகத்தை ஆரம்பித்துள்ளார்கள். இவற்றுக்கு முகங்கொடுக்கவும் நாம் தயாராகவேண்டும்.

கொரோனா சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்பட்டமையிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.