ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன் கடமையை நிறைவேற்றவில்லை!- அமைச்சர் மஹிந்த அமரவீர

ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் கடமையை நிறைவேற்றவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்தமையை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு ஆணைக்குழு ஒன்றினை நியமித்தமைக்கு காரணம், குறித்த சம்பவத்தை செய்வதற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கும் இந்த அமைப்பு செயற்படுவதற்கு நிதி அளித்தவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கும் ஆகும்.

மேலும் இத்தகையதொரு பயங்கரவாத சம்பவம் இடம்பெறுவதற்கு உள்நாட்டில் உள்ளவர்களா காரணம் அல்லது வெளிநாட்டை சேர்ந்தவர்களா என்பதை கண்டறிய வேண்டியதும் அவசியமாகும்.

இதேவேளை, பயங்கரவாத அமைப்பு ஒன்றினை வழிநடத்தும் தலைவன், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி உயிரிழப்பதில்லை.

ஆகவே மீண்டும் இத்தகையதொரு சம்பவம் இடம்பெறாமல் தடுப்பதற்கு பயங்கரவாத குழுவின் உண்மையான தலைவன் யார் என்பதை கண்டறிவது அவசியமாகும்.

இத்தகைய விடயங்களை ஆராய்வதற்காகவே ஆணைக்குழுவொன்று தாபிக்கப்பட்டது. ஆனால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை பார்த்தால் வேறு விடயங்கள் தொடர்பிலேயே  அதிக கவனத்தை செலுத்துகின்றது.

அதாவது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , கலகொட அத்தே ஞானசார தேரர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களையே ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

ஆகவேதான் ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.