ஆளுநர் நிறைவேற்று அதிகாரியாக இருக்கக் கூடிய மாகாணசபையை முறைமை மாற்றப்பட வேண்டும்… -தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் .கமலதாஸ்

தற்போதுள்ள அரைசியலமைப்பின்படி முதலமைச்சர் என்பவர் தீர்மானங்களை முன்மொழிபவராகவும், அதனை நிறைவேற்றுகின்ற அதிகாரம் கொண்டவராக ஆளுநரே இருக்கின்றனர். இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். முதலமைச்சரே நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும். மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற, மத்திய அரசிற்கு ஆமாம் போடுகின்ற ஆளுநர் அதிகாரத்தை நாங்கள் விரும்பவில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாணசபைத் தேர்தல் குறித்து சமகால அரசியல் நிலைமையுடன் தொடர்பு படுத்தி இன்றைய தினம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசிலமைப்பு என்பது நாங்கள் இழந்துவிடக் கூடாத ஒரு சந்தர்ப்பமாகும். ஏனெனில் குடியரசு அதிகரமுள்ள நாடு என்ற ரீதியில் ஒவ்வொரு வாக்காளர்களும் தங்கள் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ளவர்கள். அதற்கான கதவு திறந்து விடப்பட்டிருக்கிறது. பிரிஸ்டிஸ் காலணித்துவத்தின் சிபாரிசுகளோ, இதுவரை காலமும் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களோ இனிமேல் செல்லுபடியாகாது.

புதிய அரசியலமைப்பு எழுதப்படும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சிங்கள பௌத்த அபிலாசைகளை முன்நிறுத்தியதாக பொதுஜன பெரமுன தங்கள் அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதேநேரம் இந்தியாவினுடைய ஏற்பாட்டில் இலங்கை அரசு சம்மதித்த இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்ற, அரசியற் பகிர்வளிக்கின்ற 13வது திருத்தச்சட்டத்திற்கு வலுச்சேர்ப்பதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், எந்த அரசும் இதுவரை அந்த வாய்ப்புகளை வழங்கவில்லை. அந்தவகையில் அவற்றை நிராகரிக்காத வண்ணம் அவற்றையும் உள்வாங்கியவாறு ஒரு பல்லினத்துவம் மிக்கதும், அதே நேரம் தத்தமது தாயகப் பரப்புகளில் சிறுபான்மை மக்கள் தங்கள் அதிகாரத்தை, தனித்துவத்தைப் பேணக் கூடியவாறானதுமான பரிந்துரைகளை முன்வைத்து வருகின்றோம்.

மாகாணசபைத் தேர்தல் ஒரு அராஜகமான போக்கில் இன்றுவரை நடாத்தப்படாமல் பிற்போடப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பல நல்லிணக்கமான போக்கில் எமது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் நடந்து வந்திருக்கின்றார்கள். எங்களைப் பொருத்தவரையில் வடக்கு மாகாணமாக இருந்தாலும் சரி, கிழக்கு மாகாணமாக இருந்தாலும் சரி எவருக்கும் தங்கள் உரிமை மறுக்கப்படாதவாறு தங்கள் அரசாட்சியை அமைப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் சொந்த நிதியைத் திரட்டக்கூடியதும், அதனைக் கையாளக் கூடியதும், காணி உட்பட தங்கள் சொந்த வளங்களை மக்களுக்காகப் பங்கிடக்கூடியதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இந்த வகையில் நாங்கள் அனைத்துத் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற சக்திகளுடன் இணைந்து கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு தனி மாகாண ஆட்சியை நிறுவுவதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம்.

இதில் சிங்களவர்களையும் உள்வாங்க வேண்டும். அவர்களையும் உள்வாங்கியவாறு ஒரு மாகாணசபை ஆட்சியை தமிழர்கள் மந்திரி சபையைக் கொண்டு அமைக்க வேண்டும். ஆனால், ஆளுநர் நிறைவேற்று அதிகாரியாக இருக்கக் கூடிய மாகாணசபையை நாங்கள் விரும்பவில்லை. தற்போதுள்ள அரசியலமைப்பின்படி முதலமைச்சர் என்பவர் தீர்மானங்களை முன்மொழிபவராகவும், அதனை நிறைவேற்றுகின்ற அதிகாரம் கொண்டவராக ஆளுநருமே இருந்து வருகின்றனர். இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். முதலமைச்சரே நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும்.  அல்லது ஒரு செனற்சபையொன்று உருவாக்கப்பட்டு அதனூடாக முதலமைச்சர் நிறைவேற்றும் அதிகாரத்தினைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். அதனையே நாங்கள் புதிய அரசியலமைப்பிற்கு எங்கள் முன்மொழிவாக வைத்துள்ளோம். எனவே மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற, மத்திய அரசிற்கு ஆமாம் போடுகின்ற ஆளுநர் அதிகாரத்தை நாங்கள் விரும்பவில்லை. எனவே மக்கள் ஆட்சி பரிநமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.