ஆலோசிக்காமல் இரணைதீவை தேர்ந்தெடுத்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ முடியாத செயலாகும்-ஆனந்தசங்கரி

இஸ்லாமிய சகோதரர்கள் செறிந்து வாழுகின்ற இடங்களில் வெற்றிடமாக பல ஏக்கர் காணிகள் இருக்கும் போது, முஸ்லீம் அமைப்புகளுடன் இது பற்றி கலந்து ஆலோசிக்காமல் இரணதீவை தேர்ந்தெடுத்தது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாத செயலாகும். என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று புதன்கிழமை (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரணதீவுப் பகுதியை நான் நன்கு அறிவேன். தற்போது தான் இடம்பெயர்ந்த அந்த மக்கள் தங்களது மீன்பிடித் தொழிலை அங்கு ஆரம்பித்திருக்கிறார்கள். யுத்தத்தின் பாதிப்பிற்கு அதிகளவு முகம் கொடுத்து, தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்தவர்கள் இரணைதீவு மக்களே! இந்த நிலையில் அவர்களை மேலும் பீதிக்குள்ளாக்கும் நிலைமையே இந்த நடவடிக்கையாகும்.

கொரோனாவால் இறப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் புதைக்க எடுத்த தீர்மானம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாததொன்றாகும். அவசரமாக எடுத்த இந்த முடிவு நாட்டின் இனங்களுக்கான விரிசலை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்துவிடும்.

இரணைதீவு கடல் சூழ்ந்த பகுதி என்பதால், மழைக்காலங்களில் உடல்கள் மேலும் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏதோ ஒரு காரணத்திற்காக அரசு இந்த முடிவை எடுத்திருந்தால், இந்த தீர்மானம் முற்றிலுமாக அதற்கு முரண்பாடாகவே தோன்றுகின்றது. மேலும் அம் மக்கள் நிலத்தடி நீரையே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே அரசு இவ்விடயத்தில் முஸ்லீம் அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து இரணைதீவை தவிர்த்து பொருத்தமான வேறொரு இடத்தை தெரிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.