தேசிய ரீதியில் சாதனையாளர்களாக உருவாக்குவதே பிரதான நோக்கம்-வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் நாகராஜன்

எமது மாவட்ட அணி வீரர்களையும் தேசிய ரீதியில் சாதனையாளர்களாக உருவாக்குவதே சங்கத்தின் பிரதான நோக்கம் என்று வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.

வவுனியாமாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் “டி லைசன்ஸ்” பயிற்சிதிட்டம் வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பல்வேறு இடர்களிற்கு மத்தியில் உதைபந்தாட்ட சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக “டி லைசென்ஸ்” பயிற்சிநெறி நடைபெற்றுள்ளது. அதற்காக உதைபந்தாட்ட சங்கம் என்றவகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்தி்ருந்தோம்.

இதன்மூலம் தேசிய ரீதியில் பெறுமதியான சான்றிதழ்களையும், விளையாட்டு நுணுக்கங்களையும் எமது மாவட்ட வீரர்கள் பெற்றுள்ளனர். வவுனியா உதைபந்தாட்ட சங்கத்திற்கு எதிராக பலர் பொய் பரப்புரைகளை முன்னெடுத்துவரும் நிலையிலும் எமது மாவட்ட வீரர்களை தேசிய அணிகளில் இடம்பிடிக்க வைப்பதற்கான சாத்தியமான விடயங்கள் தொடர்பாக நாம் ஆராய்ந்து அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். எமது அணிகளும் தேசியரீதியில் சாதனைகளை அடைவதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் நாம் கவனம் எடுத்துள்ளோம். அந்த நிலையை விரைவில் ஏற்படுத்துவோம். என்றார்.

குறித்த பயிற்சிநெறியில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த சம்பத் பெரேரா, தேவாசகாயம் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன், வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களின் வீரர்கள், பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் என 30 பேர் பங்கெடுத்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.