கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகவும் 1000 ரூபா பிரச்சினை தீர்க்கப்படாது – பழனி திகாம்பரம்

(க.கிஷாந்தன்)

கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகவும் 1000 ரூபா பிரச்சினை தீர்க்கப்படாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று  (07) ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், மாவட்ட தலைவர்கள், தோட்ட கமிட்டி தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே திகாம்பரம் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்…

‘தோட்ட தொழிலாளர்கள் இன்று கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகவும் ஏமாற்றப்பட்டுள்ளனர். அரசாங்கம் 1000 ரூபா அதிகரிப்பு தொடர்பான வர்தமானியை வெளியிடவுள்ளது.

இந்த நிலையில் 15 நாட்கள் மாத்திரமே வேலை வழங்கவுள்ளதாக கம்பனிகள் அறிவித்துள்ளன. 1000 ரூபா விடயத்தில் கம்பனிகள் நாடகமாடுவதாக நான் ஏற்கனவே கூறினேன். இப்போது அதுவே நடக்கின்றது. ஹோல்டன் தோhட்டத்தில் இன்று வரை வேலை நிறுத்த போராட்டம் தொடர்கின்றது. போராட்டத்தின் விளைவாக ஹோல்டன் தோட்ட பெண்கள் கண்டி போகம்பரை சிறையில் உள்ளனர்.

நான் நான்கரை வருட ஆட்சியில் எவரையும் சிறைக்கு அனுப்பவில்லை. துறைமாரை தாக்குமாறு எவருக்கும் சொல்லவில்லை. தீர்வுவழங்காத தலைவர்களே உள்ளனர். நான் சொன்னால் எவரும் கேட்பதில்லை. ஆனால் அவ்வாறானவர்கள் சொன்னால் மாத்திரம் மக்கள் கேட்கின்றனர். அவர்கள் காலங்காலமாக ஏமாற்றுகின்றனர். எவ்வளவு கூறினாலும் நம்மவர்களுக்கு புரிவதில்லை. ஆகவே உண்மையான தலைவர்களை புரிந்துக்கொள்ள வேண்டும். 20 பேர்சில் வீடு கட்டுவதாக கூறியவர்கள் இன்று இன்னும் 7 பேர்ச்சில் கூட வீடு கட்டும் பணிகளை ஆரம்பிக்கவில்லை.

நான் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் 300 வீடுகளை கட்டிக்கொடுத்தவன். ஓற்றுமையாக இருந்தால் கம்பனிகளுக்கு எதிராக போராடி வெல்லாம். ஹோல்டன் பிரச்சினையில் நமது மக்களே நம்மவர்களை காட்டிக்கொடுத்துள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தின் மூலமும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகவும் 1000 ரூபா பிரச்சினை தீர்க்கப்படாது. ஆகவே பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே நிரந்தர தீர்வு கிடைக்கும். கூட்டு ஒப்பந்தத்திலும், சம்பள நிர்ணய சபையிலும் பிரச்சினை. இதற்கு தீர்வு என்ன? ஆகவே தொழிலாளர்களுக்கு தோட்ட காணிகள் பிரித்து கொடுத்து கொழுந்தை தோட்ட நிர்வாகம் வாங்க வேண்டும். அதுவே தீர்வு. ஆகவே மக்களுக்கு துரோகம் இழைப்போரை வீட்டுக்கு அனுப்பி நல்லவர்களை தெரிவுச் செய்ய வேண்டும்’ என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.