விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் பிணையில் விடுவிப்பு

(க.கிஷாந்தன்)

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமிமலை, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை இன்று (10.03.2020) பிணையில் செல்வதற்கு அட்டன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் அனுமதி வழங்கினார்.

ஓல்டன் தோட்ட முகாமைத்துவத்துக்கும், தொழிலாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து, 8 தொழிலாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

முகாமையாளர்களை தாக்கியமை உட்பட தொழிலாளர்களுக்கு எதிராக 9 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. முகாமைத்துவத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மார்ச் 3 ஆம் திகதிவரை 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். முதலாம் திகதி ஏனைய இரு தொழிலாளர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணை வழங்ககூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. எனினும், தொழிலாளர்களின் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காகவே இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, அவர்களை பயங்கரவாதிகளாக காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர் என தாம் வாதங்களை முன்வைதத்ததாக தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 தொழிலாளர்களையும், இன்று ஆஜரான 12 பேரும் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கபபட்டனர்.

எதிர்வரும் ஏபரல் 28 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.

தம்மை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்த அனைவருக்கும் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர். அத்துடன், விடுதலையாகும் நாளில் ஆயிரம் ரூபா குறித்த அறிவிப்பு வெளிவந்ததையிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.