ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் 212 பேர் டெங்கு நோய்…

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 11ம் திகதி வரை 212 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மார்ச் மாதம் மாத்திரம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்; தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலை கிராமத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், பிரதேச சபை, சமூகமட்ட அமைப்புக்கள், பொலிஸ் நிலையம் என்பன ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து சேவையாற்றி வருகின்றனர்.

அத்தோடு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்; ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 11ம் திகதி வரை டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்த 96 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 10 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.