தமிழ் மக்களின் நீதியை உறுதிசெய்வது அவசியம் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் நீதியை உறுதிசெய்வது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை) கொழும்பு ஹைட்பார்க்கில் மக்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

போரினால் ஒட்டுமொத்த நாட்டுமக்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட வடக்கு, கிழக்கு மக்கள் அதனால் அதிகளவில் பாதிப்படைந்தனர்.

எனவே, ஒருமித்த இலங்கைக்குள் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்வது அவசியமாகும். அதன்மூலம் தேசியபாதுகாப்பும் நாட்டின் சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும்.

அதேபோன்று தோட்டத்தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கக் கூடியவகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.