பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் விஜயம்!

பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் ஷெய்க் ஹசீனா அவர்களது அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2021 மார்ச் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் விஜயம் செய்யவுள்ளார்.

பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு  பிரதமரின் இவ்விஜயம் அமையவுள்ளது.

கொவிட் -19 தொற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இணங்க, கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கைகளை தொடர்ந்து பங்களாதேஷுக்கான இராஜதந்திர விஜயத்திற்கு இலங்கை சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு கௌரவ பிரதமர் வெள்ளிக்கிழமை (மார்ச் 19) பிற்பகல் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இவ்விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர்  ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி அதிமேதகு முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் விவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கௌரவ பிரதமர் ஈடுபடவுள்ளார்.

பங்களாதேஷ் குடியரசின் இவ்விசேட அழைப்பு மற்றும் இவ்விஜயத்தின் போது நடத்தப்படவுள்ள உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு இடையிலான நீண்டகால வலுவான உறவை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம், தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு போன்ற பல்வேறு துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

பங்களாதேஷ் சுதந்திரப் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேசிய தியாகிகள் நினைவுச்சின்னத்தை பார்வையிடவுள்ளார்.

அத்துடன்  பிரதமர் பங்கபந்து நினைவு அருங்காட்சியகத்தையும் பார்வையிடவுள்ளார். 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஒரு தனி மாநிலமாக மாறியதுடன், அதனை அடுத்த ஆண்டு முதல் இலங்கையுடன் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியதால், 2022ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.