செயலிழந்த நிலையில் வவுனியாவில் இரு கைக்குண்டுகள் மீட்பு!

இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஈரப்பெரியகுளம், நவகமுவ பகுதியில் குறித்த இரு கைக்குண்டுகளும் நேற்று (16) மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை காரணமாக மண் அரித்துச் செல்லப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதையடுத்து ஈரப்பெரியகுளம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த இரு கைக்குண்டுகளும் இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்ற மில்ஸ் 36 வகையைச் சேர்ந்த கைக்குண்டுகள் எனவும், அவை செயலிழந்து காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு கைக்குண்டுகளையும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்