இணையத்தில் பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக புதிய சட்டம்

இணையதளத்தின் ஊடாக பொய்யானதும் திசை திருப்புவதுமான செயல்களுக்கு எதிரான சட்ட மூலத்தைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (19) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (20) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இணையத்தளங்கள் வாயிலாக பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம் மோசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தப்படுவதுடன் குறித்த நிலைமைகள் சமூகத்தை பிளவுபடுத்துவதற்கும், வெறுப்புணர்வை பரப்புவதற்கும் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல நாடுகள் சட்டங்களை வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இணையத்தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் சமூக பாதுகாப்புக்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரஜைகளுக்கும் சிவில் சமூகத்தவர்களுக்கும் சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கும் நடடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, குறித்த பணிக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சரும் வெகுசன ஊடக அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.