119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்

நாளாந்தம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அனர்த்தங்கள் உள்ளிட்ட அவசர தேவைகளை அறிவிப்பதற்காக 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம், தவறாக பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெறும் அழைப்புக்கள் தொடர்பில், நடத்தப்பட்ட ஆய்வின் ஊடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

2020ம் ஆண்டு 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 12 லட்சத்து 32 ஆயிரத்து 272 அழைப்புக்கள் வந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதன்படி, பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு நாளொன்றிற்கு சுமார் 3000 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, பொலிஸ் அவசர அழைப்பு பிரிவை, தொடர்புக்கொள்வதற்காக நாளொன்றில் சுமார் 8000 பேர் வரை முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அழைப்பை மேற்கொள்ளும் 93 வீதமான அழைப்புக்கள், தேவையற்ற அழைப்புக்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதனால், பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு வரும், தேவையான அழைப்புக்களை ஏற்க முடியாத மற்றும் பயனுள்ள சேவையை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

பாரிய குற்றச் செயல்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்ற அவசர தேவைக்காக மாத்திரம், 119 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு, அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.