ரிஷாத் கைது, ஹரின், மனுஷா மீதான அச்சுறுத்தல்: நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்! – மனோ அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. இவற்றை மூலம் இன்றைய அரசு, எதிர்க்கட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து, நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயல்கின்றது. இவை தொடர்பில் ஆராய நாளை ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இவை பற்றி நாம் ஆழமாக ஆராய்வோம்.”

என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ரிஷாத் கைது, ஹரின், மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்.

நண்பர் ரிஷாத் மீதான பொதுவான சமூக வலைத்தள குற்றச்சாட்டுகளை நானறிவேன். அவரது கட்சியினர் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசுக்கு ஆதரவளித்த அரசியல் சூழல் தொடர்பிலும் எனக்கு மனவேதனை இருக்கின்றது. ஆனால், இவற்றைகே காரணமாக இன்று கூறி, அவரது கைதை நியாயப்படுத்தவோ, அரசின் அராஜகப் போக்குக்கு ஒரு சாட்டு தேடி தரவோ கூடாது. எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல், அவரது கைதை, அவர் கைது செய்யப்பட்ட முறைமையை நமது கட்சி கண்டிக்கின்றது.

கைது அச்சுறுத்தல் எனக்குப் புதிதல்ல. இதைவிட மிகப் பயங்கரமான 2007ஆம் ஆண்டு, இன்றைய ஜனாதிபதி பலமிக்க பாதுகாப்பு செயலாளாராகப் பணியாற்றியபோது, கோர யுத்தம் வடக்கு, கிழக்கில் நடக்கின்றது. அப்போது, எனது தொகுதி கொழும்பில் அடைக்கலம் புகுந்த வடக்கு, கிழக்கு தமிழர்கள் வகைதொகை இல்லாமல் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் புறநகர் பகுதிகளில் வீசப்பட்டிருந்த வேளை, அந்த அரச பயங்கரவாத அராஜகத்துக்கு எதிராக தெருவில் இறங்கிப் போராடினேன் என்பதற்காக, என்னைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் வைத்து, கொடுமையாக விசாரித்துப் பயமுறுத்தினார்கள்.

அப்போது எனக்கு ஆதரவாக எந்தவொரு தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாயைத் திறக்கவில்லை. அரசுடன் சேர்ந்து பலர் அமைதி காத்தார்கள். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில சிங்கள முற்போக்காளர்கள் மட்டுமே எனக்காகக் குரல் கொடுத்தார்கள்.

ஆனால், அந்தத் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு இன்று எனது நிலைபாடுகளை நான் தீர்மானிக்க முடியாது. அந்தளவு சிறுமனதாளன் நான் அல்லன்.

இப்போது, பகிரங்கமாகக் கொழும்பில் குடும்பத்துடன் வாழும் ரிஷாத் ஐ, அதிகாலை அமைதியை ஊடறுத்து, அவரது வீட்டைச் சுற்றி வளைத்து, ஒரு பாதாள உலகக் கேடியை இழுத்துச் செய்வதைப் போல் கொண்டு சென்றதன் மூலம் இந்த அரசு எமக்குச் சொல்கின்ற செய்தி என்ன?

தன் மீது குற்றஞ்சாட்ட சாட்சியங்கள் இருந்தால், தன்னை விசாரியுங்கள் என ரிஷாத் பலமுறை கூறியுள்ளார். ஆனால், எதிர்க்கட்சியில் இருக்கும்போது, தினசரி வரிசையாக வந்து, அவர் மீது சி.ஐ.டியில் புகார் செய்து விட்டு, பின் ஊடகங்களில் வசை பாடி விட்டு, சாட்சியங்கள் இருக்கின்றன எனக் கூறி விட்டு, ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சூத்திரதாரிகளைத் தூக்கில் போடுவோம் எனவும் கூவி விட்டு, ஆளும்கட்சியாக மாறிய பின், சுமார் இரண்டு வருடங்கள் சும்மா இருந்து விட்டு, இப்போது நௌபர் மௌலவி என்பவரே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரி எனவும் அறிவித்து விட்டு, இப்போது ரிஷாத்தை இந்த அரசு கைது செய்துள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நௌபர் மௌலவியை சூத்திரதாரியாக ஒப்புக்கொள்ளாததால், அவரை சமாளிக்க ரிஷாத்தை இந்த அரசு கைது செய்கின்றது என்ற பலத்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல்தான், நண்பர்களான ஹரின், மனுஷ ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. நாளை இது இன்னும் மேலும் பலரையும் சுற்றிவளைக்கும். ஆகவே, நாம் இந்தப் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ரிஷாத் கைது பற்றி, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவராக நான் பேசினேன். நாளை செவ்வாய்க்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இவை பற்றி நாம் ஆழமாக ஆராய்வோம்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்