கோமாரியில் காட்டுயானைகளின் அட்டகாசம்! துவம்சமான குடிசை:மயிரிழையில்தப்பிய குடும்பஸ்தர்!

(காரைதீவு சகா)
பொத்துவிலையடுத்துள்ள கோமாரிக்கிராமத்தில் அதிகாலையில் புகுந்த காட்டு யானைகள் குடிசை வீடு மதில்களை உடைத்து அட்டகாசம் செய்துள்ளன.

இச்சம்பவம் நேற்று(28) புதன்கிழமை அதிகாலை 2.மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோமாரி இரண்டாம் பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதனால் கோமாரிக்கிராமமே அச்சத்தில் மூழ்கியுள்ளது.

அங்கு புகுந்த காட்டு யானைகள் நகுலன் சதீஸ் என்ற குடும்பஸ்தரைத் தாக்கிவிட்டு அவரது குடும்பம் வாழ்ந்துவந்த குடிசையை துவம்சம் செய்தது. நகுலன் என்ற குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

அத்துடன் நின்றுவிடாது அருகிலுள்ள குடிமனைகளுக்கும் சென்று அங்குள்ள மதில்களை உடைத்து வீழ்த்தியுள்ளது. பயிர்பச்சைகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் நேரில் சென்று பார்வையிட்டு சேதவிபரத்தை கிராமசேவை உத்தியோகத்தரிடம் அறிவித்துள்ளார்.

கிராமசேவை உத்தியோகத்தர் மேல் நடவடிக்கை எடுப்பதாகக்கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அக்குடும்பம் நிர்க்கதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்