சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமரினால் திறந்து வைப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (30) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

ரூபாய் 1,480 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடத் தொகுதி கேட்போர் கூடம், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளடங்களாக பன்னிரெண்டு மாடிகளை கொண்டுள்ளது.

புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் வகையில் நினைவு பலகையை திறந்து வைத்த பிரதமர், அதனை தொடர்ந்து இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அங்கு அனுசாசனம் நிகழ்த்திய பௌத்தாலோக மாவத்தை அதுல தஸ்ஸன விகாரை உள்ளிட்ட விகாரைகளின் விகாராதிபதி சிறி தம்மவங்ச மஹா நிகாயவின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய பொரள்ளே அதுல நாயக்க தேரர் பிரதமரினால் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஆற்றலும் தைரியமும் கிட்ட வேண்டும் என பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எமது தேசத்தின் பொக்கிஷமாவார். அவர் இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கை வாழ பிரார்த்திப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா, நீதியமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன, பதில் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜய ராஜரத்னம், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தம்மவர்தன மற்றும் பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.