ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

  கைது செய்யப்பட்டு,  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரி புத்தளத்தில் இன்று காலை (02) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

 

புத்தளம், கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புத்தளம் மாவட்டத்திலிருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதில் கலந்துகொண்டு, ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்ய வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். சுலோக அட்டைகள் மற்றும் பதாதைகளுடன் சமூக இடைவெளிகளைப் பேணி நின்ற இவர்கள், “எங்கள் தலைவனை விடுதலை செய். “ரிஷாட் பதியுதீனை ஏன் விடுதலை செய்தாய்? அதற்கான காரணத்தை வெளிப்படுத்து? நீதி செத்துவிட்டதா?” போன்ற கோஷங்களுடன், மிகவும் ஆக்ரோஷமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் ஆர்ப்பாட்டம் செய்ததை காண முடிந்தது.

 

இங்கு கருத்து தெரிவித்த கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் கூறுகையில், எந்தக் குற்றமும் செய்யாத அவரை இன்னும் தடுப்புக் காவலில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன என்று கேள்வியெழுப்பியதுடன், நேர்மையாக விசாரணைக்கு அழைக்காமல் நள்ளிரவிலே அவரை கைது செய்தது அரசியல் பழிவாங்கல் என்றார்.

 

மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் நடந்த அத்தனை விசாரணைகளிலும் தமது தலைவன் குற்றமற்றவர் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், இப்போது அவசர அவசரமாக தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை என்ற போர்வையில், விடுதலை செய்யாமல் இருப்பது எதோ ஒரு உள்நோக்கத்துக்கவே என்றார்.  

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.