கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தலில் எனது முயற்சி  தொடரும் – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக இன்று 03.05.2021 திகதி திங்கட்கிழமை அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் மீண்டும் பேச்சு வார்த்தையொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டிய நியாயத்தை அமைச்சரிடம் எடுத்து கூறியுள்ளதுடன், தேவையான  எழுத்து மூலம் ஆவணங்களையும் பின்தங்கிய கிராம அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சமர்ப்பித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்ட அமைச்சர், இது குறித்து தான் கவனம் செலுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக நாம் பாராளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் பல முயற்சிகளை தொடர்ச்சியாக  மேற்கொண்டுவந்திருந்ததுடன்,  தொடர்ந்தும் அமைச்சர் சமல்ராஜபக்ஸ, மற்றும் முன்னால் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஸ மூலமும் முன்னெடுப்புக்களை  தொடர்ந்தவண்ணமே இருக்கின்றோம். பல விமர்சனங்களையும், விசமத்தனங்களையும் தாண்டி, கல்முனை வாழ் தமிழ் மக்களின்  நியாயமான நீதியான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.
அது நிச்சயமாக தற்போதைய அரசாங்கத்தினால் முடியும், பிரதமர் அவர்களின்  வாக்குறுதி நிறைவேற்றப்படும்  என்ற நம்பிக்கை எமக்கு உண்டு, கல்முனை வடக்கு தமிழ்  பிரதேச செயலக தரமுயர்த்தலில் எமது முயற்சி  தொடருமெனவும் இதன்போது தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.