பிரபாகரன் படத்தை முகநூலில் பிரதமருக்கு ‘டக்’ செய்தால் பிரதமரை கைது செய்வீர்களா ? – சாணக்கியன் கேள்வி?

பிரபாகரனுடைய படத்தை முகநூலில் நான் பதிவேற்றி பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைதுசெய்வீர்களா என கேட்க விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது மிகவும் ஒரு கேவலமான செயல்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் போலியான முகநூல் ஒன்றின் ஊடாக அவரது முகநூலில் ஒரு டக் பதிவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையில் முகநூல் மூலமாக ஒருவர் தனது பதிவினை அவரது முகநூலில் பதிவேற்றி டக் செய்ததன் காரணமாக கைது செய்வது என்பது மிகவும் ஒரு கேவலமான விடயமாக தான் நான் பார்க்கின்றேன்.

இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சனை நடந்து கொண்டிருக்கின்றது. நாட்டிலே இடம்பெற்ற ஈஸ்ட்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா என்றழைக்கப்படும் பெண்மணியை கூட கண்டுபிடிக்க இயலாத நிலையில் இருக்கும் இலங்கை காவல்துறையினர், முகநூலில் ஒருவர் ஒருவருக்கு டக் செய்யப்பட்டதற்காக கைது செய்து விசாரிப்பது என்பது மிகவும் ஒரு கீழ்த்தரமான விடயம்.

இந்த அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக செய்யும் ஒரு வேலைத்திட்டமாக தான் பார்க்க வேண்டியுள்ளது. நான் நாளைய தினம் பிரபாகரனுடைய படத்தை முகநூலில் போட்டு பிரதமரை டக் செய்தால் பிரதமரை கைது செய்வீர்களா என கேட்க விரும்புகின்றேன். உண்மையில் இது பாரியொரு தமிழ் மக்களை அரசியல் ரீதியாக அடக்குகின்ற செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன். இந்த அரசாங்கம் உடனடியாக இவ்வாறான வேலைத்திட்டங்களை நிறுத்த வேண்டும்.

இன்று கொரோனா காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் தமிழர்களை அடக்க முயற்சி எடுக்க கூடாது என சொல்ல விரும்புகின்றேன். இதை வன்மையாக கண்டிப்பதுடன் அமைச்சருடனும் பேசவுள்ளேன்.

இவ்வாறு தொடருமானால் பல அமைப்புகள் உருவாகும். இந்த அரசுக்கு எதிராக போராடவும் தயாராக உள்ளோம். வட கிழக்கு மட்டும் இல்லாமல் மலையகத்திலும் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் தினத்தில் கைது செய்தவர்களுக்கும் எந்தவித விசாரணையும் செய்யவில்லை. ஆகவே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராடத்தில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்