கல்முனை பற்றிமா தேசிய கல்லூரி 62 நூல்களுடன் சாதனை:அலறி மாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா)

கல்வியமைச்சு நடாத்திய ‘நாட்டிற்கு பெறுமதியான நூல்’ எனும் தலைப்பில் நாடளாவியரீதியில் நடாத்திய தேசியப்போட்டியில் கல்முனை பற்றிமா தேசிய கல்லூரி 62 நூல்களை வழங்கி சாதனை படைத்துள்ளது.

அதற்காக கொழும்பு அலறி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த வருடம் கொரோனா-19 காலத்தில் பாடசாலைகள் பூட்டப்பட்டு இருந்த போது மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டு ‘நாட்டிற்கு பெறுமதியான நூல்’ எனும் தலைப்பில் நூல்களை எழுதுவதற்கான போட்டியினை கல்வி அமைச்சு நடாத்தியது.

இப்போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இருந்து 62 மாணவர்கள் பல்வேறு விதமான தலைப்பில் எழுதிய நூல்கள் மாகாண கல்வி திணைக்களத்தினூடாக கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலே அதி கூடிய நூல்களை எழுதிய பாடசாலையாக பற்றிமாக் கல்லூரி தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இந் நூல்களை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சர்களின் ஒப்பத்துடனான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இச்சான்றிதழ்களின் கையளிப்பு நிகழ்வு (21- புதன்) அலரி மாளிகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூல்களை எழுதிய 62 மாணர்கள் சார்பாக ஒரு மாணவியும் கல்லூரி அதிபர் வண.சகோ சந்தியாகு அடிகளாரும் கலந்து கொண்டனர்.

ஏனைய அனைத்து மாணவர்களுக்கான சான்றிதழ்களும் கல்லூரியில் வைத்து வழங்கப்படவுள்ளது என அதிபர் வண.சகோ.சந்தியாகு அடிகளார் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்