வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தர்மலிங்கம் யோகராயா தெரிவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளராக கூட்டமைப்பின் பங்காளிகட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் யோகராயா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில்   வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ் தேசியகூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சிகாலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்க கட்சிகளிற்கிடையில் புரிந்துணர்வு ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.
அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராயசிங்கம் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்கள் தமது பதவியினை ராயினாமா செய்திருந்தனர்.

அந்தவகையில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதியதவிசாளர் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில்,  வவுனியா தெற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தேர்தல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
குறித்த தேர்தலில் தமிழ்கூட்டமைப்பு சார்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் த.யோகராயாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.வேறு கட்சிகளை சார்ந்தவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை இந்நிலையில் யோகராயா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபையில் மொத்தமாக 30 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் அதிகபட்சமாக, தமிழ் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.