ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) முற்பகல் 10.05 மணிக்கு பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார்.

ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து, இராஜாங்க அமைச்சர்களானகனக்க ஹேரத், டி.வி.சானக ஆகியோர் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெர்னாந்து உள்ளிட்ட அமைச்சர்களுடன் பாராளுமன்ற சபை மண்டபத்துக்கு வந்த ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருடன் சபையில் அமர்ந்தார்.

ஜனாதிபதி சபையில் அமர்ந்திருந்தபோது வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன உரையாற்றினார். சிறிது நேரத்தில் சபையிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்துக்குச் சென்று சில நிமிட நேரங்கள் அங்கிருந்தார்.

கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் முதல் தடவையாக பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு அவர் தலைமை தாங்கினார்.

இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்ததுடன், சபை நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.