1000 ரூபா சம்பள வர்த்தமானிக்கு எதிரான மனு மே 31 வரை ஒத்திவைப்பு

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளார்ந்த அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானிக்கு, எதிராக, பெருந்தோட்ட கம்பனிகள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

இது தொடர்பிலான ரிட் மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொராயா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தம்மை இடையீட்டு மனுதாரராக ஏற்று மன்றில் விடயங்களை முன்வைக்க சந்தர்ப்பமளிக்குமாறு தனியார் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் கோரிக்கை முன்வைத்தார்.

எனினும், மனுதார்களான பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா அக்கோரிக்கைக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதனையடுத்து தனியார் தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் சட்டத்தரணி முன் வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து, மனுதாரர்களான பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தமது சேவை பெருநர்களால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிறுவனங்களை நடத்திச் செல்வதாகவும், அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைய தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்கினால் பெருந்தோட்டங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என நீண்டகால தரவுகளை சமர்ப்பித்து மன்றுக்கு அறிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே மனு மீதான விசாரணைகள் மே 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

முன்னதாக கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி குறித்த மனு பரிசீலனைக்கு வந்திருந்த போது குறித்த வழக்கை நேற்று மே மாதம் 5 ஆம் திகதியும் எதிர்வரும் 17 ஆம் திகதியும் விசாரணைக்கு எடுப்பதாக திகதி குறிக்கப்பட்டிருந்தது. அ

தன்படி, மனு மீது ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும், அந்த ஆட்சேபனைகள் தொடர்பில் பதில்களை நேற்று முன்தினம் மே மாதம் 4 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே நேற்று மனு மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டன. எனினும் அவை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டன.

முன்னதாக அக்கரப்பத்தனை பெருந்தோட்டக் கம்பனி, பலாங்கொடை பெருந்தோட்டக் கம்பனி, எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பனி, ஹப்புகஸ்தென்ன பெருந்தோட்ட கம்பனி, ஹொரனை பெருந்தோட்டக் கம்பனி, கேகாலை பெருந்தோட்டக் கம்பனி, களனி வெலி பெருந்தோட்டக் கம்பனி, கொட்டகல பெருந்தோட்டக் கம்பனி, மடுல் சீமை பெருந்தோட்டக் கம்பனி, மல்வத்தை வில்லா பெருந்தோட்டக் கம்பனி, மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி, மத்துரட்ட பெருந்தோட்டக் கம்பனி, நமுனுகுல பெருந்தோட்டக் கம்பனி, தலவகாலை தேயினை தோட்டம், உட புசல்லாவை பெருந்தோட்டக் கம்பனி, வட்டவல பெருந்தோட்டக் கம்பனி, ஹெட்டன் பெருந்தோட்டக் கம்பனி, பொஹவந்தலாவை தேயினை தோட்டம், லலன் இறப்பர் பிரைவட் லிமிடட் ஆகிய 20 கம்பனிகள், கடந்த 12 ஆம் திகதி, மேன் முறையீட்டு நீதிமன்றில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தனர். சி.ஏ. ரிட் 143/ 2021 எனும் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ர கீர்த்தி, தேயிலை தொழிற்துறை சம்பள நிர்ணய சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.