சிறுபோக நெற்செய்கையினை சேதப்படுத்திய கட்டாகாலி மாடுகள் வளைத்துப் பிடிப்பு!

(வி.சுகிர்தகுமார்)

  அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சி றுபோக நெற்செய்கையினை சேதப்படுத்திய கட்டாகாலி மாடுகளை விவசாய அமைப்பினரின் உதவியுடன் விவசாயிகள் சிலர் இணைந்து வளைத்துப் பிடித்து அடைந்து வைத்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை பனங்காடு சிப்பித்திடல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த கால்நடை உரிமையாளர்கள் தமக்கான நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் பிரதேச செயலகம் பிரதேச சபை மற்றும் விவசாய திணைக்களம் உள்ளிட்டவர்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அன்மைக்காலமாக அதிகரித்து வரும’ கட்டாக்காலி மாடுகளினால் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களும் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளும் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் ஆலய ஒலிபெருக்கி மற்றும் நேரடியாகவும் கால்நடை உரிமையாளர்களுக்கு தகவல் வழங்கியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கால்நடைகளை வீதிகளில் அலைமோத விட்டுள்ளனர்.

இதனால் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிறுபோக நெற்செய்கையினை பாதுகாக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் இதற்கான நடவடிக்கை எடுத்து தமக்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்