தமிழர்களை காட்டிக் கொடுத்தது நீங்கள் தான் ஹரீஸ் எம்.பிக்கு ஜெயசிறில் பதிலடி !

தமிழர்கள் காட்டிக்கொடுத்தார்கள் கைக்கூலிகள் என ஹரீஸ் எம்பி. பேசியதை வன்மையாகக்கண்டிக்கிறேன். உண்மையில் கடந் தகாலங்களில் தமிழர்களைக் காட்டிக்கொடுத்தது நீங்கள்தான் என்பதை உலகறியும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்பி பேசியதற்கு கண்டனஅறிக்கையொன்றை வெளியிட்டு அவர் மேலும் கூறுகையில்:

இனவிடுதலைக்காகவும் நிலவிடுதலைக்காகவும் தனது சுகபோகங்களையெல்லாம் விட்டெறிந்துவிட்டு மக்களோடு மக்களாக நின்று எந்தவித சாதிமத வேற்றுமை பாராட்டாமல் பணியாற்றிவருபவர் சாணக்கியன் எம்.பி. அவர்கள்.
றி சாட் ,அசாத்சாலி போன்றோர் கைதுசெய்யப்பட்டதற்கும் சரி ஜனாசா எரிப்பிற்கும் சரி துணிந்துநின்று குரல்கொடுத்தவர் அவர்.

அவர் தனது பாட்டனார் போன்று முஸ்லிம்மக்களையும் அரவணைத்தே செல்கிறார். அவர் முஸ்லிம்கள் சார்பாகப்பேசியபோது நாவினிக்க காதுகுளிர அனைவரும் ‘சாணக்கியன்தான் தலைவன்’ என்று ஜால்ரா அடித்தார்கள்.

அதே சாணக்கியன் தனது இனத்திற்காக குரல்கொடுக்கின்றபோது அவர் இனவாதியாக கத்துகிறார்கள்.அவர் மும்மொழி விற்பன்னர்.முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல எந்த மக்களுக்கும் எதிரானவரல்ல. கல்முனைவாழ் 40ஆயிரம் தமிழர்களை அடகுவைத்து பேசியிருந்தால் சாணக்கியன் நல்லவர்.

தமிழர்களது போராட்டம் எப்போதும் சிறுபான்மைமுஸ்லிம்களையும் இணைத்தே நடந்திருக்கிறது.
ஆனால் நீங்கள் கல்முனையை வைத்து அரசியல்பிழைப்பு நடாத்தி அரியாசனம் ஏறிவருகிறீர்கள். முஸ்லிம் மக்கள் நல்லவர்கள். அவர்களது அறியாமையை பயன்படுத்தி இனவாதத்தை விதைத்து அதில் குளிர்காய்ந்துவருகிறார்.

கல்முனையின் பூர்வீகம் வரலாறு தெரியாமல் மீண்டும் மீண்டும் பச்சைப்பொய்யைச்சொல்லி கல்முனையை காப்பாற்றுவதற்கு அதாவது தமிழரிடமிருந்து பாதுகாக்கவே 20க்கு கைதூக்கினோம் என்றீர்கள். யார் சமுகத்தை காட்டிக்கொடுத்தவர்? யார் கைக்கூலி? என்பதையறியலாம்.

தமிழ்த்தலைவர்கள் நல்லிணக்கம் என்ற நல்லெண்ண சமிக்ஞையை காட்டியபோதெல்லாம் நீங்கள்  தொடர்ந்து அரப்பு வைத்துவந்ததே வரலாறு. உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறீர்கள். உள்ளத்தளவில் வைரம்பாராட்டி தங்கள் வேலைகளை மாத்திரம் பூர்த்திசெய்துகொண்டீர்கள்.
நல்லிணக்கம் என்ற போர்வையில் அரப்புவைத்தகாலம் மலையேறிவிட்டது.இனி அந்தப்பருப்பு வேகாது.


கல்முனையை வைத்து இனவாதஅரசியல் செய்கிறீர்கள் என்று அன்று கோடீஸ்வரன் எம்.பி கூறினார். இன்று சாணக்கியன் கூறினால் அதைப்பொறுக்கமுடியாது காட்டிக்கொடுத்தவர்கள் கைக்கூலிகள் என்று கத்துகிறீர்கள்.இனி இப்படிப்பட்ட கதைகளை நிறுத்துங்கள்.

வரலாற்றில் தமிழ்சமுகத்தை காட்டிக்கொடுத்தவர் யார்? கைக்கூலிகள் யார்? என்பதை முழுநாடே அறியும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்