முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என்று செயற்படுகிறார்கள் -கலையரசன்

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து பயணிக்க வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என்று செயற்படுகிறார்கள். இது இந்த பேரினவாத அரசு தற்காலத்தில் கையாளுகின்ற பிரித்தாளும் விடயங்களுக்குத் தீணி போடுகின்றதாகவே. முஸ்லிம் சமூகம் இன்னும் இன்னும் பல அடிகளை வாங்கக்கூடிய வகையிலேயே முஸ்லிம் அரசியலாளர்களின் செயற்பாடு அமைகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
இன்றைய தினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது. ஆனால் சிறுபான்மைச் சமூகமாக இருக்கின்ற முஸ்லிம் அரசியலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களுடைய பூர்வீக பிரதேசங்களை கபளீகரம் செய்கின்ற விடயம் நீண்டகாலமாக அரங்கேறி வருகிறது. அந்த முன்னெடுப்பின் அங்கமாகவே கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் குறைப்பு விடயத்தினைப் பார்க்கின்றேன்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கடந்த 33 வருடங்களாக தனியான செயலகம் போன்று இயங்கி வருகிறது. அவ்வாறான வேளையில் முஸ்லிம் அரசியலாளர்கள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக தமிழர் பிரதேசங்களை கூறுபோட்டு கபளீகரம் செய்ய முற்படுகின்றனர். நிச்சயமாக இவ்வாறான செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலே தமிழ் – முஸ்லிம் உறவில் பாரிய ஒரு விரிசலை ஏற்படுத்தும்.

தமிழர்கள் பல விதமான துன்புறுத்தலுக்கு ஆளான யுத்த காலத்தை சாதக சாதுர்யமாகப் பயன்படுத்தி பல விடயங்களை கிழக்கிலே கையாண்டு முஸ்லிம் மக்களின் இனப் பரம்பலை அதிகரிப்பதற்காக முழு மூச்சாக செயற்பட்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட விடயங்களை ஞாபகப்படுத்தி எந்த ஒரு அரசியலாளர்களின் உள்ளங்களையும் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் தொடர்ச்சியாக முஸ்லிம் அரசியலாளர்களின் செயற்பாடு, தமிழர்களை எவ்வாறு ஒரு இடத்திலிருந்து கபளீகரம் செய்து அகற்ற வேண்டும் என்ற ஒரு முன்முனைப்பிலேயே தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் அமைச்சராக இருந்த ஏ.எல்.எம்.அதாஉல்லா, 5000 மக்கள் தொகையைக் கொண்ட அக்கரைப்பற்றை பிரதேசத்தை ஒரு பிரசே சபையாகவும், ஒரு மாநகர சபையாகவும் உருவாக்கியிருந்தார். இதெல்லாம் அரசியல் அதிகாரங்களை வைத்துக்கொண்டு செய்த வேலைகளாகும்.

ஆனால் கல்முனையைப் பொறுத்தமட்டில் 39,000 மக்கள் வாழ்கின்ற கல்முனை வடக்கு நகரத்திலே தமிழ்ப் பிரதேச செயலகமொன்று தனியாக முழு நிர்வாகக் கட்டமைப்பில் இயங்கும் இவ்வேளையிலேயே சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக நடைபெறுகின்ற அநீதிகளை விட்டு விட்டு தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரு குரோத சிந்தனைப் பார்வையில் முன்னெடுப்பதற்காக கல்முனையிலே இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஷ் எடுக்கின்ற நடவடிக்கை மன வேதனையான விடயம்.

தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இணைந்து மக்களுக்கான நல்ல பல காரியங்களை முன்னெடுக்க வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஷைப் போன்றவர்கள் முன்னெடுக்கின்ற பணிகள் எங்களுக்கும் தமிழ்மக்களுக்கும் மன வேதனையைத் தருகின்றது. எனவே, அம்பாறை மாவட்டத்திலே தமிழர்கள் ஒரு குறிப்பிட்ட வீதம்தான் வாழ்கிறார்கள். எங்களுடைய ஒவ்வொரு வரலாறுகளையும் எடுத்துப் பார்க்கின்றபோது, எல்லைக் கிராமங்களிலே இடம்பெயர்வுகளால் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

எனவே எதிர்காலத்தில் அரசியல் ரீதியான அதிகாரங்களை தமிழர்கள் மீது திணித்து அதை மேற்கொண்டு தங்களுடைய பணிகளை முன்னெடுத்தாலும் நாங்கள் பின்நிற்கப் போவதில்லை. நிச்சயமாக முஸ்லிம் சமூகம் இன்னும் பல அடிகளை வாங்கக்கூடிய வகையிலேயே முஸ்லிம் அரசியலாளர்களின் செயற்பாடு அமைகின்றது.

ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து பயணிக்க வேண்டிய அரசியல்வாதிகள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என்று செயற்படுகிறார்கள். இது இந்த பெரும்பான்மைச் சமூகம் தற்காலத்தில் கையாளப்படுகிற ஒவ்வொரு விடயங்களுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தீணி போடுகின்ற செயற்பாடாகவே அமையும்.

ஆகவே, அரசாங்கத்தோடு இணைந்து எங்களுக்கெதிரான வேலைகளை முஸ்லிம்கள் முன்னெடுத்தாலும் தொடர்ச்சியாக எங்கள் மக்களின் பணிகளை இருப்புகளை பாதுகாப்பதற்கு அக்கறை செலுத்துவோம். இதைப் போன்று பல சதிகள் எங்களுக்கு ஏற்டுத்தப்பட்டது, இருந்தும் எங்களுடைய மக்கள் பணிகளை தாமதப்படுத்தவோ சோர்ந்து போகவோ இல்லை. தொடர்ச்சியாக திடகாத்திரமாக முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.