போலி காசோலையை வழங்கி 430 இலட்சம் ரூபா பணத்தை மோசடி!

வீட்டு நிர்மாணப் பணிகளுக்காக இரும்பு கம்பிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றுக்கு சொந்தமான வங்கி கணக்கொன்றில் போலி காசோலையை வழங்கி 430 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

வீட்டு நிர்மாணப் பணிகளுக்காக இரும்புகம்பிகளை உற்பத்தி செய்து வரும் நிறுவனமொன்றுக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் போலி கசோலையை வழங்கி 430 இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில வங்கி ஊழியர் , போலி காசோலையை அச்சிட்டவர் அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியவர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்களைப் போன்று காசோலையை மாற்றி பணம் பெற்றுக் கொள்வதற்காக வங்கிக்கு சென்றவர்கள் என நான்கு பேரை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குறித்த நிறுவனத்தின் ஊழியர்களைப் போன்று காசோலையை மாற்றுவதற்காக வங்கிக்குச் சென்றதாக கூறப்படும் நபர்களுள் ஒருவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.