க.பொ.த (உ.த) பெறுபேற்றின் படி கிழக்கு மாகாணம் மீண்டும் கடைசி நிலைக்கு வந்துள்ளது…

எப்.முபாரக்  2021-05-11
அண்மையில் வெளிவந்த 2020 க.பொ.த (உ.த) பெறுபேற்றின் புதிய பாடத்திட்ட பாடசாலைப் பெறுபேற்றின்படி கிழக்கு மாகாணம் மீண்டும் கடைசி நிலைக்கு வந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018 பெறுபேற்றின்படி 9 ஆம் நிலையில் இருந்த கிழக்கு மாகாணம் 2019 புதிய பாடத்திட்ட பாடசாலைப் பெறுபேற்றின்படி 4 ஆம்  இடத்திற்கு முன்னேறியிருந்தது. இம்முறை அது மீண்டும் பழைய இடத்திற்கு அதாவது 9 ஆம் இடத்திற்கு வந்துள்ளது.
2020 பெறுபேற்றின்படி சகல விடயங்களிலும் கிழக்கு மாகாணம் பின்னடைந்திருப்பதை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள பகுப்பாய்வின் மூலம் கண்டு கொள்ள முடிகின்றது.
புதிய பாடத்திட்ட பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு 3 ஆம் இடத்திலிருந்த கிழக்கு மாகாணத்தின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவு இம்முறை 6 ஆம் இடத்திற்கு பின்னடைந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு 4 ஆம் நிலையிலிருந்த பௌதீக விஞ்ஞானப் பிரிவு இம்முறை 8 ஆம் இடத்திற்கு பின்னடைந்துள்ளது.
அதேபோல 4 ஆம் நிலையிலிருந்த வர்த்தகப் பிரிவு இம்முறை 9 ஆம் இடத்திற்கும், 5ஆம் நிலையிலிருந்த கலைப்பிரிவு இம்முறை 6 ஆம் நிலைக்கும், உயிரியல் தொழில்நுட்பப் பிரிவு 6 ஆம் இடத்திலிருந்து 7 ஆம் இடத்திற்கும் பின்தள்ளப்பட்டுள்ளது.
பொறியியல் தொழில் நுட்பப் பிரிவு கடந்த ஆண்டும், இம்முறையும் 8 ஆம் இடத்திலேயே உள்ளது.
இது இவ்விதமிருக்க மாவட்ட தரப்படுத்தலில் கடந்த 2019ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் முறையே 8, 10, 21 ஆகிய இடங்களில் இருந்தன. இம்முறை இவை முறையே 14, 22, 24 ஆகிய இடங்களுக்குப் பின்னடைந்துள்ளன.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி கிழக்கு மாகாண பெறுபேறு மட்டங்களை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.