காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கில் பக்தர்களுக்குத் தடை!

(வி.ரி.சகாதேவராஜா)

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வரலாற்று பிரசித்திபெற்ற காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலின் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகிகள் 10 பேருக்கு மட்டும் இந்தப் பாரம்பரிய சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு, எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை  திருக்கதவு திறந்து, கல்யாணக்கால் நடும் வைபவத்துடன் ஆரம்பமாகி, 25ஆம் திகதி செவ்வாய் அதிகாலை திருக்குளிர்த்திப் பாடலுடன் நிறைவடையவிருக்கிறது.

இது தொடர்பில் காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளது கூட்டத்தில், காரைதீவு உதவி பிரதேசச் செயலாளர் எஸ்.பார்த்தீபன் எடுத்துரைத்தார்.

அவர் மேலும் கூறுகையில், “பாரம்பரிய சடங்கு என்பதால், கிரமமாக அனைத்துச் சம்பிரதாயங்களையும் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பதிவுசெய்யப்பட்ட கோவில் நிர்வாகிகள் 10 பேர் மாத்திரம் சடங்கு காலத்தில் கோவிலில் தங்கியிருந்து அதனைச் செய்யவேண்டும்.

“அத்துடன், கடைகள் உட்பட ஏனைய வெளி விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. நேர்த்திகள் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்