முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தடையை ரத்துச்செய்யகோரி நீதிமன்றத்தில் பத்திரம்!

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை உடன் இரத்துச் செய்யுமாறு கோரி அதே நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தலில் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் 27 பேருக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவில் அவர்களுடன் இணைந்து செயற்படுகின்றவர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்றும் 20 இற்கும் மேற்பட்டவர்களுக்குத் தடையுத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்தத் தடையுத்தரவுகளை உடன் இரத்துச் செய்யுமாறும், நினைவேந்தல் செய்வதற்கு அனுமதிக்குமாறும் கோரியே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தெரிவித்து யாழ். காவல்துறையினரால் நேற்று முன்தினம் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமையைச் சுட்டிக்காட்டி முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் சார்பில் சட்டதரணி தனஞ்சயன் தலைமையில் ஏனைய சட்டதரணிகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பிலும் சட்டதரணிகளான சுகாஸ் ,காண்டீபன் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.