வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறிய இருவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

வவுனியா, சாந்தசோலைப் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறிய இருவருக்கு எதிராக பொலிசாரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, சாந்தசோலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சனிக்கிழமை (15.05) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இதன்போது தொற்றுக்குள்ளான நபருடன் உணவு விருந்துபாசரத்தில் கலந்து கொண்டதாக சாந்தசோலை பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அவ் வீட்டில் இருந்து வெளியில் நடமாடியுள்ளனர்.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று (17) காலை வவுனியா நகரப்பகுதிக்கும், ஆண் ஒருவர் தனது விவசாய நிலப்பகுதிக்கும் சென்றுள்ளனர். இதனை அவதானித்த சிலர் வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற இருவரையும் மீள வீட்டுக்கு வரவழைத்தவுடன், கொவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.