அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000 தை கடந்த நிலையில் ஆலையடிவேம்பில் அன்ரிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன

(வி.சுகிர்தகுமார் )

அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1000 தை கடந்த  நிலையில் இன்று ஆலையடிவேம்பு பனங்காடு பகுதியில் எழுமாறாக அன்ரிஜன்; பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அம்பாரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1021 ஆக அதிகரித்துள்ளதுடன் கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்ட நிலையில்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் ஆலோசனையின் பிரகாரம் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலனின் மேற்பார்வையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், பொலிசார் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்பில் இப்பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

வீதியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தோர் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணித்தோர்கள் அக்கரைப்பற்று பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன்; பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இப்பரிசோதனை இடம்பெறுவது மக்களை கஸ்டப்படுத்துவதற்கோ அல்லது பயமுறுத்துவதற்கோ அல்ல. மாறாக கொரோனா தொற்றுள்ளவர்களை இனங்காண்பதன் ஊடாக அவர்களிடமிருந்து ஏனையவர்களை பாதுகாப்பதற்காகவும் கொரோனா பரவலை தடுப்பதற்காகவுமே என இதன்போது பொதுச்சுகாதார பரிசோதகரிகளால் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

இந்நிலையில் பல பிரதேசங்களில் அத்தியாவசிய தேவைகளின்றி நடமாடியோர் மற்றும் வாகனங்களும் பாதுகாப்பு தரப்பினரால் கண்காணிக்கப்பட்டன.

இதேநேரம் கொரோனா மூன்றாவது அலையின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 3351 ஆகவும்  அம்பாரை மாவட்டத்திலும் 1021 ஆகவும் உயர்வடைந்துள்ளமை கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் புள்ளிவிபர தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளதுடன் அம்பாரை மாவட்டத்தில் 26 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்கள் பொறுப்புடனும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் சுகாதாரத்துறை அரசு உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்