தமிழ் புறக்கணிப்பை” இலங்கையரசிடமிருந்தே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர் -மனோ கணேசன்

 

தற்போது சமூக ஊடகங்களில் உலாவும் தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டும் கொண்ட ஒரு பெயர் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டு விட்டது என சீன தூதரகம் எனக்கு தெரிவித்துள்ளது. எனினும் இதுபற்றி யோசித்து பார்த்தால், தமிழ் மொழியை புறக்கணிக்க சீனர்கள், இலங்கை அரசிடம்தான் பாடம் படித்துள்ளனர் போல் தெரிகிறது.

சட்டத்துக்கு வரைவிலக்கணம் தரும் பொறுப்பை கொண்டிருக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தில், மொழி சட்டத்தை மீறும் வகையில், தமிழுக்கு பதில் சீன மொழியை எழுதி, திறன் நூலகத்தை சட்டமா அதிபரே திறந்து வைக்கிறார். இப்போது, எமது எதிர்ப்புகளின் பின் அது மாற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடந்த “சட்டமா” குளறுபடிக்கு காரணம் யார்? சட்டமா அதிபர் திணைக்களமா? சீன தூதரகமா? இலங்கை அரசா?

எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்நிலை தொடருமானால், இலங்கை-சீன அரசுகளுக்கு எதிராக நாம் மொழி போராட்டத்தை கொழும்பு தெருக்களில், துறைமுக நகருக்குள்ளேயே சென்று ஆரம்பிக்க வேண்டி வரும் கூறி வைக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

சீன நிறுவன பெயர் பலகைகளில் தமிழ் மொழி தவிர்க்கப்படுவது பற்றி தனது டுவீடர் தளத்தில் பதிவு செய்துள்ள மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ் மொழியை தவிர்ப்பதன் மூலம், சீனர்கள் நம் நாட்டின் மொழி சட்டத்தை மீறுகிறார்கள். சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டும் உள்ள பெயர் பலகைகளும் இந்நாட்டில் உள்ளன.

நான் சீன தூதுவரை சந்தித்து இதுபற்றி விளக்கி கூறியுள்ளேன். சீன மொழிக்கும், தமிழ் மொழிக்கும், அதேபோல் சீன நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில், பண்டைய வரலாற்று காலம் தொட்டு நிலவி வரும் உறவுகளை பற்றி அப்போது சீன தூதுவர் என்னிடம் மிகவும் சிலாகித்து கூறினார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதமே நான் சீன தூதரகத்துக்கு ஒரு ஆலோசனை சொன்னேன். தற்போது துறைமுக நகர் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிக்க போகும் சீன நிறுவனங்கள் இதுபற்றி மிக கவனமாக இருக்க வேண்டும் என கூறினேன். சீன தூதரகத்தில் ஒரு தமிழ் மொழி பெயர்ப்பு பிரிவை அமைத்து, இலங்கை வரும் சீன நிறுவனங்களுக்கு பெயர் பலகைகளில் தமிழ் மொழியையும் எழுதும் விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கும்படி கூறினேன்.

தற்போது சமூக ஊடகங்களில் உலாவரும் ஒரு தமிழ் இல்லாத, சிங்களம், சீனம், ஆங்கிலம் கொண்ட பெயர் பலகை படம், ஒரு வருடத்துக்கு முன்பே அகற்றப்பட்டது என சீன தூதரகம் எனக்கு அறிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும், நிலைமையில் பெரிய முன்னேற்றம் கிடையாது. இது கவலைக்குரியது. இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக எமது மொழியுரிமை குறித்து, நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும்.

இன்று யோசித்து பார்த்தால், இலங்கை வரும் சீன நிறுவனங்கள், தமிழை புறக்கணிக்க, நமது இலங்கை அரசிடம்தான் கற்றுகொள்கின்றனர் போல் தெரிகிறது. அந்தளவுக்கு உள்ளூர் நிலைமை மோசம்.

கடந்த அரசாங்கத்தில், அரச கரும மொழித்துறையும் எனது நேரடி பொறுப்பில் இருந்த போது, எனக்கு ஒதுக்கப்பட்ட வளங்களை கொண்டு மிக அதிகமான பணியை நான் ஆற்றினேன். நாட்டில் எங்காவது பெயர் பலகைகளில் தமிழ் இல்லாமலோ, பிழையாகவோ இருந்தால், எவரும் என்னை நேரடியாக எனது சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி கொடுத்தேன். நாட்டில் மொழித்துறைக்கு பொறுப்பாக ஒரு அமைச்சர் இருக்கின்றார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலைமை நிலவியது. இது அனைத்து தமிழ் மொழி எழுதி, பேசி வரும் அனைவரது மனசாட்சியும் அறிந்த உண்மை.

பேராசிரியர் சந்திரசேகரன் அவர்களை அரசகரும மொழிகள் ஆணைக்குழு தலைவராக நியமித்து, என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். புகார்களை உள்வாங்கி திருத்தி அமைக்கும் நிலையம் ஒன்றை, அமைச்சில் அமைத்தேன்.

அதேபோல், அரச நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை அமைக்க வசதி இல்லாவிட்டால் எனது அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்தேன். கனடா நாட்டுடன் ஒப்பந்தம் செய்து மொழி சட்ட அமுலாக்கலை படிபடியாக மேம்படுத்தினேன்.

இப்போது அந்த பெயரில் அமைச்சே கிடையாது. அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களம் ஆகியவை எந்த அமைச்சின் கீழ் உள்ளன என்றே பாமர மக்களுக்கு தெரியவில்லை. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் யார் என்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது.

இதுதான் இன்றைய அரசின் நிலைமை. இது இன்று இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற தமிழ் பேசும் அமைச்சர்கள், எம்பீக்கள் ஆகியோருக்குதான் வெளிச்சம். இந்த அரசாங்க எம்பீக்களுக்கே, இன்று இந்த மொழித்துறை அமைச்சர் யார் என தெரியுமோ என எனக்கு பெரும் சந்தேகமாக உள்ளது.

இந்நிலை தொடருமானால், இதற்கு எதிராக நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும். அந்த போராட்டத்தையும், இலங்கை, சீனம் ஆகிய இரண்டு நாட்டு அரசுகளுக்கும் எதிராகவே செய்ய வேண்டி வரும். இந்நாட்டு அரசியலமைப்பில் உள்ள அரச கரும மொழி சட்டத்தை மீறும் பெயர் பலகைகளில் கறுப்பு வண்ண தாரை பூசும் போராட்டத்தை நானே தலைமை தாங்கி நடத்தவேண்டிவரும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்