புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினரால் தொற்று நீக்கும் நடவடிக்கை!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவிலுள்ள 2 கிராம சேவகர் பிரிவுகள்  முடக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன

மேலும் கடந்த 21 ம் திகதி, முல்லைத்தீவில் முடக்கப்பட்ட 54 கிராம சேவகர் பிரிவுகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டபோதிலும் புதுக்குடியிருப்பு நகர் பகுதி வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை வளாகம் ஆகியன தொடர்ந்தும் முடக்கப்பட்ட பகுதிகளாகவே காணப்படுகின்றன.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 25 ஆம் திகதி நீக்கப்படும். இதன்போது புதுக்குடியிருப்பு நகர் பகுதியிலுள்ள பிரதான சந்தை உள்ளிட்ட கடை தொகுதிகளைத் திறக்கும் எண்ணத்துடன்  இராணுவத்தினரால் அப்பகுதியில் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, “கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் எம்மால் முடிந்த செயற்றிட்டங்களை மக்களின் நலன்களை கருதித்திற்கொண்டு முன்னெடுத்து வருகின்றோம்.

ஆகவே மக்களும் இவ்விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படுவார்களாயின் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து விடுபட முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.