இந்த நாட்டில் சிவில் செயற்பாட்டாளர்களுக்கான ஜனநாயக வெளிகள் மேலும் மேலும் சுருங்கி வருகின்றது..

இந்த அரசு தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து நடாத்திவரும் அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளை உற்றுநோக்கும் போது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லாத நிலையே உள்ளது. இந்த நாட்டில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும்
ஊடகவியலாளர்களுக்கான ஜனநாயக வெளிகள் மேலும் மேலும் சுருங்கி வருகின்றது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களுள் ஒருவரான எஸ்.சிவயோகநாதன் அவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நேற்று (23.05.2021) மனித உரிமைகள் சிவில் சமூக செயற்பாட்டாளரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான திரு.சபாரட்ணம் சிவயோகநாதன் (சீலன்) அவர்களின் திராய்மடு மட்டக்களப்பில் அமைந்துள்ள இல்லத்திற்கு வருகைதந்த பயங்கரவாத தடுப்பு பிரிவைச்சேர்ந்த இரு புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் அவர்மீது ஒன்றரை  மணித்தியாலங்கள் கடுமையான விசாரணையினை மேற்கொண்டனர்.
இதன்போது தமிழீழ விடுதலை புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றீர்களா என்ற கோணத்திலும், சிறிலங்கா அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றீர்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அவருடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிப்படையாக ஜனநாயக வெளியில் செயற்படும் ஒருவருக்கு வழமை போலவே பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு அரசினால் மேற்கொள்ளப்படும் முயற்சியாகவும், மனித உரிமைகள் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தமது சர்வாதிகார அராஜக ஜனநாயக விரோத ஆட்சியினை முன்னெடுக்க அரசு நடத்தும் கபடநாடகமாகவுமே பார்க்கவேண்டியுள்ளது. மேற்குறிப்பிடப்படும் விசாரணைகள் அனைத்தும் விசாரணைகள் எனும் பெயரில் மனித உரிமைகள் சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதுடன் அவர்கள் தொடர்ந்து செயற்படாதவாறு உளவியல் ரீதியான அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் கொடுப்பது ஆகும். குறிப்பாக தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியான கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுவெளியில் செயற்படும் இளைஞர்களை சிறிலங்கா ஆயுத படைகளினால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நினைவேந்தலை நடத்தியமை, முகநூலில் புகைப்படங்களை வெளியிட்டமை, முகப்புத்தகத்தில் அஞ்சலி செலுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நடவடிக்கையானது தமிழர் தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் மனித உரிமைகள் சிவில் செயற்பாட்டாளர்களுக்குமான மறைமுக மிரட்டலையும் அச்சுறுத்தலையும் நெருக்கடிகளையும் கொடுத்து அவர்களின் செயற்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்குவதாகும். இவ் அரசின் கடந்தகால மற்றும் தற்கால செயற்பாடுகளும் முன்னெடுப்புக்களும் இவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மிகவேகமாக  பரவி பல உயிர்களை பலியெடுத்து வரும் அவலம் நிறைந்த சூழலில் முழு மக்களினமுமே தம் வாழ்வைக் குறித்து கலங்கி நிற்கும் இவ்வேளையில் அரசு தனது அராஜகத்தையும் ஒடுக்குமுறையினையும் எவ்வித மாற்றமோ மனச்சாட்சியோ இன்றி தொடர்கின்றது. எனவே இவ்வரசு நாட்டிலுள்ள குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் செயற்பட்டு வரும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து நடாத்திவரும் அச்சுறுத்தல், அடக்குமுறை செயற்பாடுகளை உற்றுநோக்குகின்றபோது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாத நிலையும் இதன் அடுத்த கட்டம் என்னவாக அமையும் என்பதே ஓர் அச்சம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக பங்குனி (மார்ச்) மாதத்தில் ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டவாறு ஊடகவியலாளர் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கான ஜனநாயக வெளிகள் மேலும் மேலும் சுருங்கி வருவதுடன் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதினையும் இங்கு கோடிட்டு காட்ட விரும்புகின்றோம்.
எனவே அரசின் இவ் அராஜக ஜனநாயக விரோத செயற்பாட்டை, குறிப்பாக தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்வதையும், விசாரணைகள் செய்வதையும்  மிக வன்மையாக கண்டிப்பதுடன் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்தி மனித உரிமைகள் சிவில் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளுக்கு உத்தரவாதமளிக்குமாறு அனைத்துலக மனித உரிமைகள் சிவில் செயற்பாடுகள் நீதிக்குமான அமையங்கள், மற்றும் ஐ.நா. மன்றத்தினையும் மிக அவசரமாகவும் அவசியத்துடனும் கோரி நிற்கின்றோம். அத்துடன் இலங்கையில்  இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான சாட்சிய சேகரிப்பில் இவ்விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி சேர்த்துக்கொள்வதுடன், ஆறுமாத அறிக்கையிடலில் தமிழ் பேசும் மக்கள் மீதான பயங்கரவாத தடைச்சட்ட பிரயோகம் தொடர்பான விடயங்களை சேர்த்துக் கொள்ளுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வேண்டி நிற்கின்றோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Attachments area

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்