கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குங்கள் – ஆறுமுகம் புண்ணிய மூர்த்தி

கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்சி மன்ற சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குவதுடன், விசேட கொடுப்பனவையும் வழங்குங்கள் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த சங்கத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சங்கத்தின் வடமாகாண இணை தலைவர் ஆறுமுகம் புண்ணிய மூர்த்தி குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் 2000க்கு மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் இல்லாது சேவையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் அனைவரும் உள்ளுராட்சி மன்றங்களில் பணியாளர்களாக 3 ஆண்டுகளிற்கு மேல் சேவையில் ஈடுபடுகின்றனர்.
தற்போது உள்ள கொவிட் 19 அச்சுறுத்தல் நிறைந்த சூழலிலும் அவர்கள் தமது சுத்திகரிப்பு பணிகளை அர்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கொவிட் தடுப்பு ஊசியை அவர்களிற்கு வழங்க முன்வர வேண்டும் என நாங்கள் கோரிக்கை முன் வைக்கின்றோம்.

அத்துடன் அவர்களின் குடும்பங்களிற்கும் குறித்த தடுப்பு ஊசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களிற்கு இலகுவாக தொற்று பரவக்கூடிய சூழல் காணப்படும் நிலையில் தடுப்பூசியை அவர்களிற்கு செலுத்த வேண்டும்.

அத்தடன், நிரந்தர நியமனம் இல்லாது சேவையில் ஈடுபடும் ஊழியர்களிற்கான நிரந்தர நியமனத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கின்றோம்.

உள்ளுராட்சி மன்றங்களில் பணி புரியும் சுத்திகரிப்பு ஊழியர்கள் கொவிட் சிகிச்சை நிலையங்களிலும் கடமையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நிலையில் அவர்களிற்கு இலகுவாக தொற்று ஏற்படக்கூடிய நிலை காணப்படுகின்றது.
அவர்களிற்கு கொவிட் தடுப்பு ஊசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், அவ்வாறு கடமையில் ஈடுபட்டுள்ள ஊழியல்களிற்கு விசேட கொடுப்பனவினையும் வழங்க முன்வர வேணடும் எனவும் நாங்கள் கோரிக்கை முன் வைக்கின்றோம்.

ஏனெனில், மிக முக்கியமான காலப்பகுதியில் அவர்கள் கடமையில் ஈடுபடுகின்றனர். அவர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையில் குறித்த விசேட கொடுப்பனவை அவர்களிற்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்