மட்டக்களப்பு-கரடியனாற்றில் கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக வைத்தியசாலையை உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக வைத்தியசாலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் இன்று 28.05.2021 ஆந் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கொவிட் சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு அரசின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் 1000 கட்டில்களை தயார்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவருமாகிய பசில் ராஜபக்ஸ அவர்களின் சிந்தனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுக்களின் பிரதித் தலைவருமான பா.சந்திரகுமார் ஆகியோரின் முன்மொழிவுக்கு அமைய ஏறாவூர்ப்பற்று கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக வைத்தியசாலையே இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

100 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட குறித்து தற்காலிக வைத்தியசாலையானது நோயாளர்களுக்கான மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் மலசல கூட வசதிகள் உட்பட ஏனைய
சகல வசதிகளையும் கொண்ட தற்காலிக விடுதியாக இது அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் உள்ளிட்ட மதகுருமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம், செங்கலடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி இ.ஸ்ரீநாத், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளர் வீ.பற்குணன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.புண்ணியமூர்த்தி சசிகலா, அம்கோர் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்