எதிர்வரும் 31 ஆம் திகதி, அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் வாகனங்கள் !

அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை எதிர்வரும் 31 ஆம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் ,இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி அதாவது ஜூன் மாதம் 7ஆம் திகதி காலை 4.00 மணி வரையில் தற்போதைய பயணக்கட்டுபாடு தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுகிறது. மருந்தகங்களை மாத்திரம் இக்காலப்பகுதியல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்

இதேபோன்று பொருளாதார மத்திய நிலையங்கள் 31 ஆம் திகதி திறக்கப்பட்டு நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறை நேற்று வகுக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி கூறினார்.

இம்மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடந்த 25 ஆம் திகதி பொது மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்..

இதேவேளை நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பத்திரங்களை வழங்குவது பிரதேச செயலாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார் .

அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கான முழுமையான பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களும் காணப்படுகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்கள் இந்த பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்