பழைய கட்டடத்தினை நாடாவெட்டி திறக்காமல் மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுங்கள் -சாணக்கியன்

பழைய கட்டடத்தினை நாடாவெட்டி திறக்காமல் மட்டக்களப்பு மக்களுக்கு தடுப்பூசி வழங்க பிள்ளையானும், வியாழேந்திரனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்றினை அரசியல் செய்யும் வேலைத்திட்டமாகவே இந்த அரசாங்கம் பயன்படுத்துகின்றது.

இவ்வாறான விடயங்களை நாங்கள் முன்வைக்கும் போது சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் எங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். அரசாங்கத்தை விமர்சிப்பதை விடுத்து நீங்களே எதாவது செய்யலாம் தானே என்று.

அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வது ஒன்று தான். எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுங்கட்சியுடன் இருந்து கொண்டே இருவரும் ஒன்றும் செய்து கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றார்கள்.

அவ்வாறிருக்கும் போது நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம். இதன்படி எங்களுக்கான பொறுப்பு என்னவென்றால் எவ்விடத்தில தவறு நடக்கின்றது என்கின்ற விடயங்களை எடுத்துச் சொல்லக் கூடியது தான் எங்கள் பொறுப்பாகும்.

எமது மாவட்டத்தில் தற்போதையை கொரோனா தொடர்பான எந்தவிதமான கூட்டங்களுக்கும் எனக்கும் சக கோ.கருணாகரனுக்கும் எவ்வித அழைப்புகளும் விடுப்பதில்லை.

அரசாங்க அதிபரோ, பிரதேச செயலாளர்களோ இதுவரை காலத்தில் கொரோனா தொடர்பான எவ்வித கூட்டங்களுக்கும் தெரியப்படுத்தியதில்லை.

எங்களை அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்குக் காரணம் என்னவென்றால் எமது மாவட்டத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நாங்களும் அவ்விடத்தில் எடுத்துக் கூறமுடியும்.

எமது மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுந்தரப்பு பிரதிகள் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களைத் திறப்பு விழாவாகச் சித்தரிப்பதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால் அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான சிலருக்குத் தங்குவதற்குக் கூட இடங்கள் இல்லாமல் இருக்கின்றது. துணிச்சலாக ஒரு சிலர் இவற்றை வெளிப்படுத்துகின்றார்கள். இதுபோல் எத்தனை பேர் இருக்கின்றார்களோ தெரியவில்லை.

ஏதோவொரு பழைய கட்டடத்தில் பத்து பதினைந்து கட்டில்களைப் போட்டு ரிபன் வெட்டி திறப்பு விழா செய்யும் கௌரவ வியாழேந்திரன் மற்றும் கௌரவ சந்திரகாந்தன் ஆகியோர் எமது மக்களிடம் இவற்றைத் தான் அபிவிருத்தி என்று வாக்குறுதி அளித்தார்களோ தெரியவில்லை.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எங்களது கருத்துகளைச் சொல்வதற்குக் கூட இந்த மாவட்டத்தில் சந்தர்ப்பம் இல்லாத நிலையை அவர்கள் இருவரும் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

எமது மாவட்டத்தில் அரசாங்க அதிபர் ஒரு அடிமையாக, கைதியாகப் பயன்படுத்தப்படுகின்றார். மாவட்ட அரசாங்க அதிபர் தான் இந்த மாவட்டத்தில் முதல் அரசியற் கைதி.

அவரை நாங்கள் முதலில் விடுவிக்க வேண்டும். அதாவது மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு அரசியல் கைதியாக பிள்ளையான் வியாழேந்திரனிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் எமது மாவட்டத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பில்லாமல் கொரோனா ஒழிப்பு செயற்திட்டங்களை அவர்கள் செய்கின்றார்கள் என்றால் அதனை என்னவென்று சொல்வது.

மாவட்டத்தின் பல இடங்களுக்கு ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இறுதியாக எப்போது வந்தர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அந்த மக்களின் பிரச்சினைகள் எங்களுக்குத் தான் தெரியும். இதனை எடுத்துக் கூறுவதற்கு எங்களுக்கு இடமில்லாமல் இருக்கின்றது.

மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் கொள்ளையடிக்கும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு இன்னும் இன்னும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து திருந்தாமல் செயற்படுகின்றார்கள்.

இந்த அரசாங்கத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு என்று இதுவரைக்கும் தடுப்பூசிகள் வந்திருக்கின்றனவா? ஆளுங்கட்சியில் இருந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு இதுவரை ஒரு தடுப்பூசியும் கொண்டு வரப்படவில்லை.

ஆனால் தங்களைப் பிரபல்யமாக்கும் வகையில் சமூக வளைத்தளங்களில் ஊடகங்கள் என்ற சிலவற்றை உருவாக்கி இருக்கின்ற ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் பதிவுகளைப் போடுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

கௌரவ பிள்ளையான் அவர்கள் நாடாளுமன்றத்திலே துறைமுக நகரத்தைப் பற்றி சில கருத்துக்களைச் சொல்லியிருந்தார். துறைமுக நகரம் பற்றிச் சொல்வதாக இருந்தால் கொஞ்சமாவது பொருளாதாரம் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கும் துறைமுக நகரத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லியிருந்தார். அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட பாசிக்குடா ஹோட்டல்களில் ஒரு தமிழருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. அவ்வாறிருக்க துறைமுக நகரத்தில் வேலைவாய்ப்பு என்பது எவ்வாறு சாத்தியமாகும். அதை எவ்வாறு எமது இளைஞர்கள் நம்ப முடியும்.

சமூக வளைதளங்களில் பதவிட்டிருக்கின்றார்கள் பிள்ளையான் ஐயாயிரம் தடுப்பூசிகளைக் கொண்டு வந்திருக்கின்றார் என்று. வெறுமனே ஐயாயிரம் தடுப்பூசிகளைக் கொண்டு வருவதற்கு இவர் எதற்கு? ஒரு தடுப்பூசியின் விலை சுமார் இரண்டாயிரம் ரூபாய் எனக் குறிப்பிடப்படுகின்றது.

எமது மாவட்ட மக்களில் சுமார் 80 வீதமானவர்களுக்காவது அந்த இரண்டாயிரம் ரூபாவினைக் கொடுத்து தங்களுக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வருவார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

ஆனால் அரசாங்கமும், அரசாங்கத்தில் இருப்பவர்களும் இந்த தடுப்பூயை வைத்து பணம் உழைப்பதற்கும், தங்கள் அரசியலை நடத்துவதற்குமாகச் செயற்படுவதனை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கொரோனா நிலைமை நிமித்தம் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவினை சில ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் அள்ளக்கைகள் ஏதோ தாங்கள் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்ததைப் போன்று அதிகாரிகளிடம் இருந்து பறித்துக் கொடுக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவது அரசாங்கத்தின் கடமை. ஆகக் குறைந்து துறைமுக நகரத்தை முழு மக்களுக்குமாக கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு கொடுத்திருந்தாலாவது பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

அத்துடன் அரசினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு மத்திய கிழக்கில் இருப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று கூறியிருப்பதாகவும் அறிந்தேன். அந்த நாடுகளில் அவர்கள் இலங்கைக்கு வரமுடியாமல் எத்தனையோ நாட்களாக கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கும் சேர்த்து இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அவர்களை இந்த நாட்டுக்குக் கொண்டு வராமல் உக்ரோனில் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வர இருப்பதாகவும் சொல்லியிருக்கின்றார்கள்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதென்பது எங்களுக்கு விருப்பம் தான். ஆனால் இந்த காலகட்டத்திலே சுற்றுலாப் பயணிகள் என்ற ரீதியில் நோயாளிகள் யாரும் வந்தால் பாசிக்குடா, திருகோணமலை, அருகம்பை போன்ற பிரதேசங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் அது பரவக் கூடும் அவ்வாறே நாடு பூராகவும் நோய் கொண்டுபோகப்படும்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றின் நான்காவது அலையை கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு இவர்கள் எத்தனிக்கின்றார்களா? என்ற சந்தேகமும் இருக்கின்றது.

எனவே இந்த ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு முறையாக வழங்கப்பட வேண்டும். அரசாங்க அதிபரோ பிரதேச செயலாளரோ, அல்லது அரசாங்க அதிபரை அடிமையாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கோ மேற்கொள்ளக் கூடாது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.