காலையில் சூரியன் உதிப்பதற்கும் சீனாவே காரணம் என்று சொல்லும் நிலையில் எதிர்க் கட்சிகள் உள்ளன – பாரத் அருள்சாமி

(க.கிஷாந்தன்)

அட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் கொவிட் இடைநிலை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளதாக பிரஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி கூறியுள்ளார்.

அட்டனில்  (01) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்…

‘இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய அட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் கொவிட் இடைநிலை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய 260 படுக்கைகளை கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய இடைநிலை வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ரம்பொடை கலாச்சார நிலையமும் இடைகால சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டது.

மலையகத்தில் கொவிட் பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே தடுப்பு செயலணி ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தடுப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. மத்திய மாகாணத்தில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கான நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது.

நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை போன்ற மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கொவிட் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. கண்டி மாவட்டத்தில் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த மூன்று நாட்களாக இந்த செயற்பாடு இடம்பெறுகின்றது. நாளைய தினம் கண்டி மஹியவா உள்ளிட்ட கண்டியின் புற நகர் பகுதிகளிலும் தடுப்பூசி வழங்கப்படும். ஆகவே முறையான சுகாதார வழிக்காட்டல்களுடன் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கை சுயாதீனமான நாடு ஆகவே எமது உள்விவகாரங்களில் சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடும் தலையிட முடியாது. காலையில் சூரியன் உதிப்பதற்கும் சீனாவே காரணம் என்று சொல்லும் நிலையில் எதிர்க் கட்சிகள் உள்ளன. இது கவலைக்குரியது. ஆகவே எமது நாட்டையும் மண்ணையும் பாதுகாக்க அரசாங்கம் திடமாக செயற்படும்’ என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.