இந்திய லட்சத்தீவு இறைநேசர்களின் புனிதபூமியை பாதுகாக்க பிரார்த்தனை புரிவோம் : ஹரீஸ் எம்.பி 

ஆன்மிகத்தில் உச்சகட்ட பேணுதல்களை கொண்ட லட்சத்தீவு பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனையுடன் லட்சத்தீவின் மகிமையை சீரழிக்கும் நோக்குடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற போர்வையில் ஆடம்பர உல்லாச விடுதிகளையும், கசினோ நிலையங்களையும் அமைத்து மதுபாவனைக்கான வசதிகளையும் உண்டாக்கி மிகப்பெரும் நாசகார திட்டங்களுடன் கூடிய வேலைத்திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆரம்பித்துள்ளது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,
இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு அண்மையில் அமைந்துள்ள லட்சத்தீவு எனும் பிரதேசம் உள்ளது. இது இறை நேசர்களின் பிரதேசமாக விளங்குகிறது. இங்குதான் ஆன்மிகத்தின் உச்சகட்ட தலைவர்கள் வாழ்கிறார்கள். இந்த பிரதேசத்தில் இருந்துதான் தங்கல்கள் என்றழைக்கப்படும் அந்த ஆன்மிக தலைவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களுக்கும் வந்து இஸ்லாத்தை போதித்துள்ளார்கள். அவர்களின் தங்கள் குடும்பங்கள், அவுலியாக்கள் அதிகமாக வாழ்ந்துகொண்டிருக்கிற தீவே இந்த லட்சத்தீவு. இங்கு வெள்ளையர்களே தமது கைவரிசை காட்ட அச்சப்பட்ட பிரதேசமாக இருக்கிறது.
மிக நீண்ட வரலாறு கொண்ட இங்கு மதுபாவனை, களியாட்டங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வெளியாட்களின் நடமாட்டமும் இங்கு இருக்காது. வீடுகளை வாங்கி வெளியாட்கள் குடியேற முடியாது மிகவும் பேணுதலான ஒரு சமுகத்தினரே இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கு மேல் மக்கள் வாழும் இந்த இடத்தில் முன்னனுமதி இல்லாமல் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. 1 சதவீதமளவில் இங்கு தமிழ், கிறிஸ்தவ மக்களும் வாழ்கிறார்கள். இப்போது பிரதமர் மோடி அரசு இந்த இடத்தை நோக்கி தன்னுடைய இனவாத பார்வையை செலுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனையுடன் இந்த புனித லட்சத்தீவின் மகிமையை சீரழிக்கும் நோக்குடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற போர்வையில் ஆடம்பர உல்லாச விடுதிகளையும், கசினோ நிலையங்களையும் அமைத்து மதுபாவனைக்கான வசதிகளையும் உண்டாக்கி மிகப்பெரும் நாசகார திட்டங்களுடன் கூடிய இந்த வேலைத்திட்டத்தை அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆரம்பித்துள்ளது. இதனை எதிர்த்து காங்கிரஸ் பிரதானி ராகுல் காந்தி, தமிழக முதல்வர், கேரள மாநில முதல்வர் போன்ற பல முக்கிய தலைவர்களும் தமது எதிர்ப்பையும், கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர். இப்படியான நெருக்கடிகளிலிருந்து மீளவும், முஸ்லிம் சமூகத்தையும், லட்சத்தீவு வாழ் இறைநேசர்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ எல்லாம் வல்ல நாயன் இறைவனிடம் நாங்கள் அதிகம் அதிகம் பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.